ஊழியர் மரணம்: பிஎஸ்ஏ நிறுவனத்திற்கு கூடுதல் அபராதம் விதிக்க மனிதவள அமைச்சு மேல்முறையீடு

ஊழியர் மரணம்: பிஎஸ்ஏ நிறுவனத்திற்கு கூடுதல் அபராதம் விதிக்க மனிதவள அமைச்சு மேல்முறையீடு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2026 - 5:58 pm

2 mins read

சிங்கப்பூரின் கெப்பல் முனையத்தில் 2017ஆம் ஆண்டு நேர்ந்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், துறைமுக நிறுவனமான பிஎஸ்ஏ கார்ப்பரேஷனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மனிதவள அமைச்சு மேல்முறையீடு செய்துள்ளது.

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதற்காக, நீதிமன்றம் மார்ச் 16ஆம் தேதி பிஎஸ்ஏ நிறுவனத்திற்கு $225,000 அபராதம் விதித்தது. அந்தத் தண்டனை போதாது என்று ஜூன் 15ஆம் தேதி மனிதவள அமைச்சு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

முன்னதாக, விபத்தைத் தடுத்திருக்க முடியும் என்று வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், $300,000 முதல் $350,000 வரை அபராதம் விதிக்கக் கோரியிருந்தார்.

பிஎஸ்ஏ நிறுவனமும் தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி காலை, பிஎஸ்ஏ தொழில்நுட்ப வல்லுநரான 33 வயது லீ சுவீ லூங், பாரந்தூக்கி இயந்திரத்தில் ஏற்பட்ட சத்தத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

அப்போது, பாரந்தூக்கியின் சுழலும் இயந்திரப் பகுதிக்கும் தளத்திற்கும் இடையில் சிக்கிய அவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிஎஸ்ஏ நிறுவனம் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான முறையான பாதுகாப்பு நடைமுறைகளையோ அல்லது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையோ நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

மூன்று வெவ்வேறு பாரந்தூக்கிகளுக்கான பொதுவான விதிமுறைகளையே பிஎஸ்ஏ பின்பற்றியதாகவும் அதனால் ஊழியர்கள் ஆபத்தான முறையில் வேலை செய்ய வேண்டிய நிலையில் இருந்ததாகவும் மனிதவள அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

உயிரிழந்த லீ, பாதுகாப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர் என்றும் நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாட்டால் அவர் உயிரிழந்தது மிகக் கொடூரமானது என்றும் அரசுத் தரப்பு குறிப்பிட்டது. 33 நாள்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு ஜூன் 4ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஊழியர்விபத்துமரணம்மனிதவள அமைச்சுஅபராதம்தண்டனைமேல்முறையீடு