துறைமுக நிறுவனமான பிஎஸ்ஏ கார்ப்பரேஷன், 2017ஆம் ஆண்டில் கெப்பல் முனையத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்திய அதே வேளையில் தீர்ப்புக்கு எதிராக அது மேல்முறையீடு செய்துள்ளது.
2017 செப்டம்பர் 20ஆம் தேதியன்று 29 வயது லீ சுவீ லூங் என்ற ஊழியர் பளுதூக்கும் இயந்திரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது அசம்பாவிதத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கில், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் பிஎஸ்ஏ நிறுவனம் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு 225,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதுடன் அதனை ஜூன் 12க்குள் முழுமையாகச் செலுத்த உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து பிஎஸ்ஏ நிறுவனம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டது.
இருந்தாலும் தன் மீதான குற்றச்சாட்டிற்கும் தண்டனைக்கும் எதிராக ஜூன் 5ஆம் தேதி அது மேல்முறையீடு செய்தது.
இது குறித்து சனிக்கிழமை (ஜூன் 13) சேனல் நியூஸ்ஏசியாவிடம் விளக்கமளித்த பிஎஸ்ஏ சிங்கப்பூர் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான கடமையாகும். இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு பிஎஸ்ஏ முழு ஒத்துழைப்பு வழங்கியது. இந்தச் சம்பவத்திற்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த எங்களது சக ஊழியரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகப் பிஎஸ்ஏ மீதான குற்றச்சாட்டை மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியான் சன் உறுதி செய்தார்.
பராமரிப்புப் பணிகளின்போது சுழலும் இயந்திரப் பாகங்களால் ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளைச் சரியாக நடைமுறைப்படுத்த பிஎஸ்ஏ தவறிவிட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்ப நிபுணரான லீ சுவீ லூங், பளுதூக்கும் இயந்திரத்தின் பழுதடைந்த கியர்பாக்ஸை சரிசெய்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

