காலாங் பகுதியிலுள்ள தஞ்சோங் ரூ ரிவர்ஃபிரண்ட் II கட்டுமானத் தளத்தில், உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் 22 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஒ) அடுக்குமாடிக் கட்டுமானத் தளத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) மாலை 4.15 மணியளவில் விபத்து நடந்தது.
12வது மாடியில் நகரும் கான்கிரீட் பம்ப் இயந்திரத்தைப் பயன்படுத்தி சிமெண்ட் கலவையை ஊற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த ஊழியர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக மனிதவள அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.
மாலை 4.20 மணியளவில் தஞ்சோங் ரூ ரோடு கட்டுமானத் தளத்திலிருந்து உதவி கோரி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. சம்பவ இடத்திலேயே ஊழியர் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரி உறுதிசெய்தார்.
சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
ஊழியரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வீவக, ஒப்பந்த நிறுவனமான ‘பிஎச்சிசி கன்ட்ஸ்ட்ரக்ஷன் சிங்கப்பூர்’ நிறுவனத்துடன் இணைந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவித்தது.
மறு உத்தரவு வரும் வரை அப்பகுதியில் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வேலையிடப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட வீவக, அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து வேலையிடப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.
உயரத்தில் வேலை செய்யும்போது கீழே விழுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முறையான கண்காணிப்பு, இயந்திரங்களை முன்னதாகச் சரிபார்ப்பது ஆகியவற்றை நிறுவனங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மனிதவள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரின் வேலையிட மரண விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 1.1 ஆக உயர்ந்துள்ளது. கட்டுமானத் துறையில் கடுமையான காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், தவறி விழுதல், உயரத்திலிருந்து கீழே விழுதல் ஆகியவை வேலையிடங்களில் நிகழும் முதன்மை விபத்துகளாகத் தொடர்கின்றன.
