செவ்வாய்க்கிழமை (மே 5) பிற்பகல் மீன் பண்ணை ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
லிம் சூ காங் கடற்கரை அருகில் இருக்கும் மீன் பண்ணை ஒன்றில் அன்று மாலை 4 மணியளவில் 30 வயது மீன்பிடி ஊழியர் மீது மின்னல் தாக்கியதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் லிம் சூ காங் படகுத்துறையின் முகவரியான 691 லிம் சூ காங் சாலையில் இருந்து உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஊழியர் சுயநினைவற்ற நிலையில் இருந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காவல்துறை மற்றும் மனிதவள அமைச்சின் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த ஊழியர் F20W நிறுவனத்தில் வேலை செய்ததாக மனிதவள அமைச்சு கூறியது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டால், ஊழியர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களைத் தேடிச் செல்லவேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியது.
கடைசியாக இடிச் சத்தம் கேட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருந்த பின்னரே வெளிப்புற நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் நடந்த அன்று, சிங்கப்பூரின் தெற்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் மாலை 5.10 மணியளவில் கனமழை பெய்யும் என தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மே மாதத்தின் முதல் பாதியில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 30 அன்று வெளியிட்ட அதன் இருவார வானிலை முன்னுரைப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் ஆண்டுக்குச் சராசரியாக 176 நாள்கள் மின்னல் ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

