உட்லண்ட்சில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) காலை நிகழ்ந்த பயங்கர விபத்தில் லாரிக்குள் சிக்கிக்கொண்ட ஊழியர் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
உட்லண்ட்ஸ் அவென்யூ 1, உட்லண்ட்ஸ் அவென்யூ 6 சந்திப்பில் காலை 8.50 மணியளவில் விபத்து நிகழ்ந்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தகவல் கிடைத்து அங்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள், லாரிக்குள் ஓர் ஊழியர் சிக்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த தீயணைப்பாளர்களும் மீட்பு நிபுணர்களும் நசுங்கியிருந்த பாகத்தை நெம்பி விலக்கி, முன்பக்க இருக்கையில் சிக்கியிருந்த ஊழியரை பத்திரமாக மீட்டனர்.
அதற்குள் உட்லண்ட்ஸ் மருத்துவமனையிலிருந்து முதலுதவி சிகிச்சைகளை வழங்க அவசர மருத்துவக் குழுவினர் அங்கு வந்து சேர்ந்தனர்.
லாரியிலிருந்து மீட்கப்பட்ட ஊழியர் சுயநினைவுடன் இருந்தார்.
அருகில் உள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மற்றொருவருக்குச் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டார்.
எஸ்ஜிஆர்வி பிரன்ட்மேன் ஊடகப் பக்கத்தில் விபத்து தொடர்பான படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன.
ஒரு படத்தில் லாரி கவிழ்ந்து கிடந்ததைக் காண முடிந்தது. முன்னதாக அது விளக்குக் கம்பத்தின்மீது மோதியதாகக் கூறப்படுகிறது,
மற்றொரு படத்தில் லாரிக்கு மேலே, பயணியின் பக்கவாட்டுக் கதவுக்கு அருகே சில அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.

