விநியோக ஊழியர்கள் இருவர் பொட்டலங்களைத் தரையில் வீசி எறியும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதைக் கண்ட இணையவாசிகள் சிலர், ஊழியர்களின் அச்செயல் தங்கள் பொருள்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கவலை தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (ஏப்ரல் 18) ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், லாலமூவ் நிறுவனத்தின் வேனிலிருந்து ஊழியர்கள் இருவர் பொட்டலங்களை இறக்குவதைக் காண முடிந்தது.
அதில் கருப்பு நிற உடை அணிந்திருந்த ஊழியர் ஒருவர், புல்வெளிப் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொட்டலங்கள்மீது மற்றொரு பொட்டலத்தை மிகவேகமாக வீசி எறிவதையும் காணலாம்.
விநியோக ஊழியர்கள் கொண்டுவரும் பொட்டலங்களில் இருக்கும் பொருள்கள் அவ்வப்போது ஏன் உடைந்து போகின்றன என்பதற்கு இதுவே காரணம் என அக்காணொளியைப் பதிவிட்டவர் தமது பதிவில் தெரிவித்திருந்தார்.
அந்தப் பதிவின்கீழ் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “அண்மையில், நான் வாங்கிய பொருள் நசுங்கிய நிலையில் விநியோகம் செய்யப்பட்டது. பொருளை வாங்குவதற்காக நான் செலுத்திய பணத்தைத் திரும்பத் தர வேண்டும் எனக் கோரியிருக்கிறேன்,” என இணையவாசி ஒருவர் தமது ஆதங்கத்தைப் பகிர்ந்தார்.
சிலர் ஊழியர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“பொருள்கள் சரியாகக் கட்டப்படவில்லை என்றால், அதற்கு விற்பனையாளர்களே பொறுப்பு. போக்குவரத்து நேரங்களில் சேதத்தைத் தவிர்க்கப் பொருள்களைச் சரியாகக் கட்ட வேண்டும்,” என மற்றொருவர் குறிப்பிட்டார்.

