தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கையூட்டு வழங்கிய கட்டுமான நிறுவன முதலாளிக்கு $15,000 அபராதம்

2 mins read
c2abfbbd-121e-4d04-994e-16c6bddc3179
பார்க் லைஃப் கூட்டுரிமை வீடுகளின் செப்பனிடும் பணிகளைப் பெற பன்னீர்செல்வம் ஏழுமலைக்குக் கையூட்டு வழங்கிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: கூகல் ஸ்திரீட் வியூ

புதுப்பிப்புப் பணிகளைப் பெற, கூட்டுரிமை வீட்டு நிர்வாகியிடம் கையூட்டு வழங்கிய நிறுவன முதலாளிக்கு வியாழக்கிழமை (மே 8) $15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் கார்கள் செல்லும் வழியில் தரைக்கற்களை மாற்றுவதற்கான குத்தகையை 41 வயது பன்னீர்செல்வம் ஏழுமலை கையூட்டு மூலம் பெற்றார்.

எனினும், பணிகள் முடிந்த ஒரு வாரத்துக்குள் கார்கள் செல்லும் வழியில் பூசப்பட்ட சாயம் உரிந்துவந்ததோடு தரைக்கற்களில் வெடிப்புகளும் விரிசல்களும் ஏற்படத் தொடங்கின.

ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்ட பன்னீர்செல்வத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த பன்னீர்செல்வம், பழுதுபார்ப்பு போன்ற சேவைகளை வழங்கும் மவுன்டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் முதலாளியுமாவார்.

பன்னீர்செல்வம், நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளைக் கவனிப்பதோடு ஏலக் குத்தகைக்கான பத்திரங்களையும் தயாரிப்பதற்குப் பொறுப்பு வகித்தார்.

கையூட்டு பெற்ற போபி அகஸ்டின் ஆண்ட்ரூஸ் என்ற ஆடவர், பார்க் லைஃப் கூட்டுரிமை வீட்டு நிர்வாகியாக 2021ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

2021 டிசம்பரில், கூட்டுரிமை வீட்டின் நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள தரைக்கற்களைப் பழுதுபார்க்கும்படி முதல்முறையாக பன்னீர்செல்வத்தை ஆண்ட்ரூஸ் தொடர்புகொண்டார்.

அதையடுத்து 2022 ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து 2023 ஜனவரி 15ஆம் தேதி வரை கடனாக மொத்தம் $2,950 தொகையைக் கையூட்டாகப் பன்னீர்செல்வம் ஆண்ட்ரூஸுக்கு வழங்கினார்.

அந்தச் சமயத்தில் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட ஆண்ட்ரூஸ், பன்னீர்செல்வத்துக்குச் சாதகமாகப் பார்க் லைஃப் கூட்டுரிமை நிர்வாகம் மவுன்டெக் பணிகளைக் கொடுக்கும்படி கோருவார்.

பன்னீர்செல்வத்தின் குற்றத்துக்காக அவருக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை, $100,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்