தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் குறித்து முதலாளிகள் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்’

2 mins read
982ac297-1524-43f4-aa27-1977ad81a08c
நவம்பர் 19ஆம் தேதியன்று நடைபெற்ற கலந்துரையாடலுக்கு நியாயமான, படிப்படியாக முன்னேறத்தக்க வேலைநியமன நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் குறித்து முதலாளிகள் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த அணுகுமுறை நிறுவனங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

இந்தக் கலந்துரையாடலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வழிநடத்தியது.

டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்கீழ் நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்குக் கோரிக்கை விடுக்கும் ஊழியர்களின் விண்ணப்பங்களுக்கு முதலாளிகள் முக்கியத்துவம் கொடுத்து நியாயமான முறையில் ஆராய வேண்டும்.

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளின் விளைவாக நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படும் என்று முதலாளிகள் கவலைப்படுவதாக நியாயமான, படிப்படியாக முன்னேறத்தக்க வேலைநியமன நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணியின் தலைமை மேலாளர் திருவாட்டி ஃபேத் லீ தெரிவித்தார்.

ஊழியர்களின் நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடு விண்ணப்பம் ஏற்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்குத் துரிதமான முறையில் சேவை வழங்க முடியாது என்ற கவலை முதலாளிகளுக்கு ஏற்படக்கூடும் என்றார் திருவாட்டி லீ.

நவம்பர் 19ஆம் தேதியன்று நடைபெற்ற கலந்துரையாடலுக்கு நியாயமான, படிப்படியாக முன்னேறத்தக்க வேலைநியமன நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்தது.

மனிதவள நிபுணர்களுக்கான பயிற்சிக் கழகம், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான சங்கம், ராயல் பிளாசா ஆன் ஸ்காட்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

வீட்டிலிருந்து வேலை செய்வது, தொடர்ச்சியற்ற வேலை நேரம், பகுதிநேர வேலை, வேலைப் பகிர்வு போன்றவை நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளில் அடங்கும்.

இந்நிலையில், அன்றாடப் பணிகளைத் தொழில்நுட்பம் மூலம் மேலும் சீரான முறையில் செய்யவும் பணிச் செயல்முறைகளில் சில படிநிலைகளை அகற்றவும் நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் வாய்ப்பு தரக்கூடியதாகக் கருத வேண்டும் என்று மனிதவள நிபுணர்களுக்கான பயிற்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகி திரு அஸ்லாம் சர்தார் தெரிவித்தார்.

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுடன் பணியாற்ற இந்த அணுகுமுறை வகை செய்யும் என்றும் அதன்மூலம் கூடுதல் உற்பத்தித்திறன், துரிதமான சேவை ஆகியவை மூலம் நிறுவனம் பலனடையலாம் என்றும் அவர் கூறினார்.

ஊழியர்களின் நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் தொடர்பான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை முதலாளிகள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்