முன்னாள் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் தொடரும் சவால்கள்

2 mins read
1a93ecf9-f9c6-4e6c-acc4-b173c68f46ba
முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் மஞ்சள் நாடா திட்டத்தின்கீழ், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முதலாளிகள் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 5,063ஆக இருந்த நிலை மாறி அதுவே 6,516ஆக 2023ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் கைதிகளைச் சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் பணியாக அவர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை முதலாளிகள் வழங்கி வருகின்றனர்.

ஆனால், அவர்களை ஒன்றிணைக்கும் பணியில் சமுதாயத்தில் அவர்கள் மீது ஏற்பட்டுள்ள கறை உட்பட பல சவால்கள் உள்ளன.

முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் மஞ்சள் நாடா திட்டத்தின்கீழ், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முதலாளிகள் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 5,063ஆக இருந்த நிலை மாறி அதுவே 6,516ஆக 2023ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் முன்னாள் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் முதலாளிகள் அவர்களின் முதல் 9 மாத பணிக்கால ஊதியத்தின் ஒருபகுதியை அரசாங்கம் எற்கும் என்ற திட்டத்தால் கிட்டத்தட்ட 700 முதலாளிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் கைதிகளை வேலையில் சேர்த்துக்கொண்ட முதலாளிகளுக்கு ஏறக்குறைய $2 மில்லியன் வழங்கப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முன்னாள் கைதிகள் தங்கள் சிறைவாசம் முடிந்தபின் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளபோதிலும், சமுதாயத்தில் அவர்கள் மீது படிந்துள்ள கறை போன்ற மற்ற தனிப்பட்ட சவால்களை அவர்கள் நீண்டகாலம் எதிர்நோக்குவதாகச் சொல்லப்படுகிறது.

மஞ்சள் நாடா திட்ட அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்ற முன்னாள் கைதிகள் தங்கள் வேலையில் நீடிப்பது காலப்போக்கில் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, முன்னாள் கைதிகள் தங்கள் வேலையில் மூன்று மாதங்கள் நீடித்திருப்பது 2020ஆம் ஆண்டு 87 விழுக்காடாக இருந்தது. அதுவே, 2023ஆம் ஆண்டு 79 விழுக்காடாக வீழ்ச்சி கண்டது. இதுபோல், முன்னாள் கைதிகள் தங்கள் பணியில் ஆறு மாதங்கள் நீடித்திருந்தது 2020ஆம் ஆண்டு 70 விழுக்காடாக இருந்த நிலை மாறி 2023ஆம் ஆண்டு 60 விழுக்காடு வீழ்ந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றிக் கருத்துரைத்த மஞ்சள் நாடா திட்ட வேலைவாய்ப்பு பயிற்சியாளர் அசிஷ் பென், முன்னாள் கைதிகள், தாங்கள் கற்றுத் தேர்ந்த திறன்கள் ஓரளவு கைவிட்டுப் போன நிலையில், அவர்கள் அதைத் திரும்பப் பெற சிறிது காலம் பிடிக்கும் என்று விளக்கினார். மேலும், நீண்டநாட்களுக்குப் பின் வேலைக்குத் திரும்பும் அவர்கள் புதிய திறன்களைக் கற்றுத்தேறவும் காலம் பிடிக்கும் என்று கூறினார்.

இதில் முன்னாள் கைதிகள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள தேவைப்படும் கால அவகாசத்தை வழங்கும் நிலையில் சில முதலாளிகள் இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

சில முன்னாள் கைதிகள் தங்கள் நிலையைச் சரிவர விளக்கிக் கூற முடியாமல் இருப்பர் என்றும் இதை முதலாளிகள் அந்த முன்னாள் கைதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிக்கு பொருத்தமானர்கள் அல்லர் என்று எண்ண வைக்கும் என்றும் திரு அசிஷ் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்