தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலைவாய்ப்பு விகிதம் இருமடங்கிற்கு மேல் வளர்ச்சி; குறைவானோரே வேலை இழந்தனர்

2 mins read
cd904e31-fd31-46f4-9a93-b5939a49ace2
மூன்றாம் காலாண்டில் 24,100 வேலைகள் கூடுதலாகக் கிடைத்தன. முந்திய காலாண்டில் அந்த எண்ணிக்கை 11,300 ஆக இருந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்வாசிகளுக்கு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அதிகமான வேலைகள் கிடைத்தன.

முந்திய காலாண்டைக் காட்டிலும் இருமடங்கிற்கும் மேல் வேலைவாய்ப்பு விகிதம் வளர்ச்சி கண்டது. அதேநேரம், ஆட்குறைப்பு விகிதம் சரிந்துவிட்டது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அந்தக் காலாண்டில் ஒட்டுமொத்தமாக 24,100 வேலைகள் கிடைத்தன. ஏப்ரல்-ஜூன் இரண்டாம் காலாண்டில் கிடைத்த வேலைகளின் எண்ணிக்கை 11,300.

மனிதவள அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஊழியர் சந்தை முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன.

ஆட்குறைப்பு விகிதத்தைப் பொறுத்தமட்டில், இரண்டாம் காலாண்டில் 3,270 பேர் வேலை இழந்த நிலையில், மூன்றாம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 2,900ஆகக் குறைந்தது. இது 11.3 விழுக்காட்டு வீழ்ச்சி.

பெரும்பாலான துறைகளில் ஆட்குறைப்பு விகிதம் குறைந்த அதேநேரம் சில துறைகளில் அது மாற்றமின்றி தொடர்ந்தது.

நிறுவனங்களின் மறுகட்டமைப்பு நடவடிக்கை ஆட்குறைப்பில் பிரதிபலித்தன.

வேலையின்மை விகிதம் செப்டம்பர் மாதம் குறைவாக இருந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் வேலையின்மை விகிதம் முறையே 2.7 விழுக்காடாகவும் 2.6 விழுக்காடாகவும் இருந்தது.

ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1.9 விழுக்காடு சரிந்த நிலையில், செப்டம்பர் மாதம் அந்த விகிதம் 1.8 விழுக்காடு எனப் பதிவானது.

கடந்த 2015 முதல் 2019 வரை நீடித்த பொருளியல் மந்தமற்ற ஆண்டுகளின் நிலவரத்தை இது பிரதிபலிப்பதாக அமைச்சு கூறி உள்ளது.

“ஏற்றுமதி சார்ந்த துறைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, நான்காம் காலாண்டில் வேலை மற்றும் ஊதிய எதிர்பார்ப்புகளில் வீழ்ச்சி காணப்பட்ட நிலையில், வேலைவாய்ப்பு விகிதம் தொடர்ந்து விரிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

“அதேநேரம், ஊழியர் சந்தையில் தொடர்ந்து இறுக்கம் நிலவும்,” என்று தரவுகளை உள்ளடக்கிய அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்