பொங்கோலில் உள்ள ‘நார்த்ஷோர் பிளாசா I’ கடைத்தொகுதியில் உள்ள சில கடைகள் மூடப்பட்டது குறித்து வாடிக்கையாளர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு (2025) டிசம்பர் மாதம், அங்குள்ள நக அலங்கார நிலையமொன்று மூடப்பட்டபோது, குடியிருப்பாளர் லிண்டா சென்னுக்கு அது சற்றுக் கவலையை உண்டாக்கியது. அந்த நிலையத்தில் எதிர்காலச் சேவைகளுக்காக அவர் செலுத்தியிருந்த ஏறக்குறைய $900 இன்னும் பயன்படுத்தப்படாமல் இருந்ததே அதற்குக் காரணம்.
தாதியாகப் பணிபுரியும் திருவாட்டி சென், அது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றார். வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அக்கம்பக்கக் கடைத்தொகுதியான அதில், சில கடைகள் நீண்டகாலமாகவே நிரப்பப்படாமல் இருந்தன. கடைத்தொகுதியின் பரபரப்பும் உற்சாகமும் குறைந்தது திருவாட்டி சென்னைப் போன்றோர்க்குக் கவலையை உண்டாக்கியது.
“மேலும் மேலும் கடைகள் மூடப்படுவதைப் பார்த்தோம். நீண்டகாலத்திற்கு அவை காலியாகவே இருந்தன,” என்று 35 வயது திருவாட்டி சென் சொன்னார். நார்த்ஷோர் பிளாசா Iக்கு மேலே இருக்கும் ‘நார்த்ஷோர் ரெசிடென்சஸ் I’ ‘பிடிஓ’ வீட்டில் அவர் வசிக்கிறார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ‘நார்த்ஷோர் பிளாசா I, II’ஐச் சென்று பார்வையிட்டபோது, ‘மின்யூஷாய்’ எனும் நக அலங்கார நிலையம் செயல்பட்ட இடம் காலியாக இருந்தது. அருகிலிருந்த இரண்டு கடைகளும் மூடிக்கிடந்தன.
மொத்தத்தில், கடைத்தொகுதியின் இரண்டு பகுதிகளிலும் கிட்டத்தட்ட 50 கடைகளில் 12 நிரப்பப்படாமல் இருந்தன. சில கடைகள், சில மாதங்களிலிருந்து ஓராண்டுக்கும் அதிகமான காலம் வரை காலியாய் இருந்ததாக ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.
அக்கம்பக்கத்தில் அதிகமானோர் குடிவந்ததைத் தொடர்ந்து, கடைத்தொகுதி பரபரப்பாக உற்சாகத்துடன் இயங்கியது. இருப்பினும், அண்மையில் பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதி திறக்கப்பட்டதால் கூட்டம் குறைந்துவிட்டது என்று சிலர் கூறினர்.
அண்மை நிலவரம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் கேட்டது. காலியாக உள்ள 12 கடைகளில் இரண்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன என்றும் அவை வெகுவிரைவில் திறக்கப்படும் என்றும் கழகம் சொன்னது. எஞ்சிய கடைகளில் புதியவர்களை அமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
குடியிருப்பாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப வாடகையில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாகக் கழகம் தெரிவித்தது. குத்தகைகளைப் புதுப்பித்த கிட்டத்தட்ட 40 கடை உரிமையாளர்கள், முன்பைவிட 10 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடுவரை குறைவான வாடகை செலுத்துவதாகவும் அது குறிப்பிட்டது.

