சிங்கப்பூரில் ஆன்-புளோக் எனப்படும் பழைய கட்டடங்களை ஒட்டுமொத்தமாக விற்கும் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர சட்டத்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மூப்படையும் குடியிருப்பு வட்டாரங்களைப் புதுப்பிக்க அந்த மாற்றங்கள் தேவை என்றும் பல காலமாக அவற்றுக்குக் காத்திருந்ததாகவும் சொத்துச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, விற்பனைக்கு வழிவிடும் உரிமையாளர் கையெழுத்துகளைப் பெறுவதற்கான காலம் குறைவது குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நாடாளுடன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கட்டடங்களை மொத்தமாக விற்கக் குறைவான உரிமையாளர்களின் ஒப்புதல் அளித்தால் போதும்.
ஒப்புதல் தரவேண்டிய உரிமையாளர்களின் எண்ணிக்கை குறைப்பு
தற்போதைய விதிமுறைகளின்டி 80 விழுக்காட்டு உரிமையாளர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும். பரிந்துரைகளின்படி, 40லிருந்து 59 ஆண்டுகள் வரை பழைமையான கட்டடங்களை விற்க 70 விழுக்காட்டு உரிமையாளர்கள் ஒப்புதல் தந்தால் போதும். 60 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் பழைமையான கட்டடங்களை விற்க 65 விழுக்காட்டு உரிமையாளர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும்.
கையெழுத்துகளைப் பெறுவதற்கான காலம் பாதியாகக் குறைப்பு
எனினும், அதற்கு வகைசெய்ய ஒட்டுமொத்த விற்பனைக் குழுக்கள் (சிஎஸ்சி) ஆறு மாதங்களில் கையெழுத்துகளைப் பெறவேண்டும். தற்போது அதற்கு 12 மாதங்கள் வழங்கப்படுகின்றன.
80 விழுக்காட்டு உரிமையாளர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்ற விதிமுறையைப் பூர்த்திசெய்வதில் சிரமங்கள் இருந்ததால் இந்தப் பரிந்துரைகள் கைகொடுக்கும் என்று சிஎஸ்சி குழுக்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள் போன்றோர் கூறுகின்றனர். அதேவேளை, தேவையான கையெழுத்துகளைப் பெற 12 மாதங்கள் தேவைப்படும் என்ற கவலையும் அவர்களிடம் இருக்கிறது.
அதிலும் 918 வீடுகளைக் கொண்டுள்ள பிரேடல் வியூ போன்ற மாபெரும் கட்டடங்களுக்குப் போதுமான உரிமையாளர்களிடமிருந்து கையெழுத்துகளைப் பெறுவது சவாலான ஒன்று என்றும் சிலர் கூறுகின்றனர்.
மற்றோர் எடுத்துக்காட்டான ஹொரைஸன் டவர்ஸ் கொண்டோமினியத் திட்டம், 211 வீடுகளைக் கொண்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அக்கட்டடத்தை விற்பதன் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன. எனினும், கையெழுத்துகளைப் பெறுவதற்கான காலம் இவ்வளவு குறைக்கப்பட்டது சற்று அளவுக்கதிகமானது என்று அதன் நிர்வாகம் கருத்துரைத்தது.
இவற்றைப் போல் வேறு சில பழைய கட்டடத் திட்டங்களின் நிர்வாகங்களும் கவலை தெரிவித்துள்ளன.


