சிங்கப்பூருக்கே உரிய அருகி வரும் நன்னீர் நண்டு இனங்கள், இப்போது இனப்பெருக்கம் செய்துள்ளன. தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் ஆய்வகத்தில் முதன்முதலாக வளர்க்க சிங்கப்பூர் நன்னீர் நண்டுகள் சில, 2018ல் புக்கிட் பாத்தோக்கில் உள்ள நீரோடையில் விடுவிக்கப்பட்டிருந்தன.
இப்போது, இந்த நண்டு இனங்கள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பூங்காக் கழகம் பிப்ரவரி 11ஆம் தேதி கூறியது.
அருகி வரும் நன்னீர் உயிரினங்களின் நிலை குறித்து ‘நேச்சர்’ எனும் அறிவியல் இதழில் ஜனவரி 8ஆம் தேதி அனைத்துலக ஆய்வு ஒன்று வெளியாகி இருந்தது. அதையடுத்து, அத்தகைய உயிரினங்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் முன்னெடுத்துவரும் முயற்சிகள் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குக் கழகம் பதிலளித்தது.
மொத்தம் 23,496 நன்னீர் உயிரினங்களில் கிட்டத்தட்ட கால்வாசி அழியும் நிலையில் உள்ளதாக அந்த ஆய்வு கண்டறிந்தது.
உலகில் எஞ்சியுள்ள சதுப்புநில வாழ்விடங்களில் ஏறக்குறைய 65 விழுக்காடு அளவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்தது. நன்னீர் நிலைகளில் ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரோடைகள், சதுப்புநிலங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
சிங்கப்பூரில் உள்ள நிலவரமும் உலகளாவிய போக்கை வெளிப்படுத்துகிறது. இங்குள்ள 277 நன்னீர் உயிரினங்களில் 111 வகைகள் அழியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

