தொண்டு நடையில் உற்சாகத்துடன் பங்கேற்ற மூத்தோர்

2 mins read
b0ef0f53-9d12-43b4-a214-1cef5a334a1d
சுகாதார அமைச்சரும் மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஓங் யி காங் மூத்தோருடன் உற்சாகமாக நடையில் கலந்துகொண்டார். - படம்: ஷின் மின்

பிறக்கும்போதே பார்வைத் திறனை இழந்தவர் நிலா தேவி சற்குணம், 57. தன் வாழ்வாதாரத்துக்கு வாரத்தில் கிட்டத்தட்ட மூன்று நாள்கள் பெருவிரைவு ரயில் நிலையங்களில் இசைக் கலைஞராக வலம் வருகிறார் அவர்.

பெருந்தொற்றுக் காலத்திலிருந்து துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலா இவ்வாண்டு முதல்முறையாக ‘ரெடி செட் கோல்ட் 2025’ தொண்டு நடையில் பங்குபெற்றார்.

தமிழ் முரசிடம் பேசிய அவர், “இதுபோன்ற நிகழ்ச்சிகள் வழி நான் நண்பர்கள் பலரைச் சந்திக்கிறேன்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அதுமட்டுமன்றி நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக இவ்வளவு தொலைவு நடந்ததாகத் தெரிவித்தார் நிலா.

“வயது, பார்வைக் குறைபாடு ஆகியவை எந்நாளும் எனக்குத் தடையாக இருந்ததில்லை. எந்த முயற்சியாக இருந்தாலும் அதை முழு மனத்துடன் செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) காலை, நிலா உட்பட 3,000த்திற்கும் மேற்பட்ட மூத்தோர் ‘ரெடி செட் கோல்ட் 2025’ தொண்டு நடையில் பங்குகொண்டனர்.

தொண்டு நடையில் கலந்துகொண்ட மூத்தோர், மெரினா பே சேண்ட்ஸ் வெளிப்புற வளாகத்தைச் சுற்றி 2 கிலோமீட்டர் நடந்தனர்.
தொண்டு நடையில் கலந்துகொண்ட மூத்தோர், மெரினா பே சேண்ட்ஸ் வெளிப்புற வளாகத்தைச் சுற்றி 2 கிலோமீட்டர் நடந்தனர். - படம்: ஷின் மின்

ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி இவ்வாண்டு மெரினா பே சேண்ட்ஸ் வெளிப்புற வளாகத்தில் நடைபெற்றது. வளாகத்தைச் சுற்றி 2 கிலோமீட்டர் நடந்தனர் மூத்தோர்.

துடிப்புடன் மூப்படைதலுக்கான ‘புளோசம் சீட்ஸ்’ நிலையத்தின் ஏற்பாட்டில் ‘எஸ்ஜி60’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சரும் மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஓங் யி காங் கலந்துகொண்டு மூத்தோருடன் உற்சாகமாக நடையில் கலந்துகொண்டார்.

வயது எந்நாளும் ஒரு பொருட்டன்று என்றார் திரு ஓங்.
வயது எந்நாளும் ஒரு பொருட்டன்று என்றார் திரு ஓங். - படம்: ஷின் மின்

அவருடன் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், மரியம் ஜாஃபர், கேப்ரியல் லாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வயது என்றும் ஒரு பொருட்டன்று என்றார் திரு ஓங். “என்னைவிட நன்றாக நடக்கக்கூடிய மூத்தோர் பலரை இன்று கண்டேன்,” என்று சிரித்தவாறு அவர் பாரட்டினார்.

செம்பவாங் வட்டாரத்தைக் கடந்து இவ்வாண்டு முதல்முறையாக இந்த நிகழ்ச்சி மெரினா பே சேண்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அமைச்சர் ஓங்குடன் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், மரியம் ஜாஃபர், கேப்ரியல் லாம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ஓங்குடன் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், மரியம் ஜாஃபர், கேப்ரியல் லாம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். - படம்: ஷின் மின்

இந்த நிகழ்ச்சி சிங்கப்பூரின் பிற பகுதிகளில் இயங்கும் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களைச் சேர்ந்த மூத்தோரை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று ‘புளோசம் சீட்ஸ்’ நிலையத்தினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்