ஈரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் ஏற்படும் தொடர் பணவீக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள, சிங்கப்பூர் வெள்ளி வலுவடைவதற்குச் சிங்கப்பூர் நாணய ஆணையம் வழிவகுத்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக நாணயக் கொள்கையைக் கடுமையாக்குவதாக ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 27) அறிவித்தது. இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி ஆணையம் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது.
ஏப்ரலில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை ஆணையம் இறுக்கிப்பிடித்தது, பணவீக்க அழுத்தத்தைக் குறைக்க உதவியது. இருப்பினும், வெளிப்புறத்திலிருந்து வரும் விலை அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது உள்நாட்டுப் பயனீட்டாளர் விலைகளில் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.
தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் தவிர்த்த அடிப்படைப் பணவீக்கம், ஜூலைமுதல் அதிகரித்து, தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2027 நடுப்பகுதியில் அது குறிப்பிடத்தக்க அளவில் தணியும். ஜூன் மாதத்தில் அடிப்படைப் பணவீக்கம் 1.6 விழுக்காடாகப் பதிவானது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஆண்டின் தொடக்கத்திலிருந்து 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. போர்ச் சூழலால் உற்பத்தி, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் வெள்ளி வலுவடைந்துள்ளது. இதனால் மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் வாங்கும் திறன் அதிகமாகவே இருக்கும்.
2026ல் சிங்கப்பூர் பொருளியல் நிலையான வளர்ச்சியைப் பதிவுசெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பொருளியல் 5.7 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த பகுதி மின்கடத்தித் துறையின் வளர்ச்சியே இதற்கு முக்கியக் காரணமாகும்.
அதேவேளையில், எரிசக்தி விலைகள் மீண்டும் திடீரென உயர்ந்தால் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகரிக்கக்கூடும். இதனால் பொருளியல் பார்வையில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாக ஆணையம் தெரிவித்தது.

