தாமான் ஜூரோங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் புளோக் ஒன்றில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் முயற்சி சோதிக்கப்படுகிறது.
புளோக் 180இல் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் மற்ற புளோக்குகளைவிட சற்று மங்கலாக எரியும்.
புளோக்கின் கீழ்த்தளம், படிக்கட்டுகள், நடைபாதைகள் ஆகியவற்றில் மூன்று நிமிடங்களுக்குமேல் ஆள் நடமாட்டம் இல்லை என்றால் அந்தப் புளோக்கில் பொருத்தப்பட்டிருக்கும் மின்விளக்குகள் ஒளியைக் குறைத்துக்கொள்ளும்.
உள்ளூர் நிறுவனமான ஆக்ரானெர்ஜி (Agranergy), நவீன மின்விளக்கு முறையை உருவாக்கியுள்ளது.
நிறுவனத்தின் மின்விளக்குகள் ஆள் நடமாட்டம் இல்லாதபோது 30 விழுக்காடுவரை ஒளியைக் குறைத்துக்கொள்ளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
எரிசக்தியைச் சேமிக்கும் அதேவேளை, ஓரளவுக்கு வெளிச்சத்தைத் தரவும் 30 விழுக்காடுவரை ஒளி குறைக்கப்படுகிறது என்று நிறுவனம் குறிப்பிட்டது.
தாமான் ஜூரோங்கில் முன்னோட்டமாகத் தொடங்கப்பட்ட நவீன மின்விளக்குகளின் சோதனைமூலம் 70 விழுக்காட்டுக்கும்மேல் எரிசக்தி மிச்சமானது.
ஜூன் மாதம் சோதனைத் திட்டம் முடிவடைந்தவுடன் நவீன மின்விளக்குகளை நகர மன்றம் மதிப்பிட்டு பிற புளோக்குகளுக்கு அவற்றை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் இவ்வாண்டின் பிற்பாதியில் ஒரு மணிநேரத்துக்கான ஒரு கிலோவாட் மின்சாரம் 27.27 காசுக்கு உயர்த்தப்படுவதாகச் செய்தி வெளியான நேரத்தில் நவீன மின்விளக்குகள் சோதிக்கப்படுகின்றன.
இதற்குமுன் முந்தைய காலாண்டில் மின்சாரக் கட்டணம் 2.1 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு மணிநேரத்துக்கான ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கான கட்டணம் 26.71 காசு.
தற்போதைய எரிசக்தி சூழலைப் பார்த்தால் வெளிச்சத்தைக் குறைத்து பயன்படுத்துவதற்கான உத்தி ஒரு நல்ல யோசனை என்றார் தாமான் ஜூரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் ஹுவாங்.

