தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்வணிகத்தில் இந்திய வணிகர்களின் ஈடுபாடு குறைவு

6 mins read
7e166704-5911-433d-b6ba-219b9d64d06f
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதில், இளைய தலைமுறையினரின் பங்கு சற்றே குறைவாக இருப்பதாகவும் வணிகர்கள் கருதுகின்றனர். - படம்: பிக்சாபே

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில் மின்வணிகத் துறையும் வளர்ந்து வருகிறது எனும் கண்ணோட்டம் இருந்தாலும் அதில் பல்வேறு சவால்கள் இருப்பதாகவே இந்திய வணிகர்கள் கருதுகின்றனர்.

கொள்ளைநோய்க் காலகட்டத்தில் அந்தத் துறை வளர்ச்சி கண்டாலும், கடந்த ஈராண்டுகளாகவே அந்தப் போக்குக் குறைந்து, பலரும் நேரடி வணிகத்திற்குத் திரும்பியுள்ளதாக வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொள்ளைநோய்க் காலத்தில் மின்வணிக வளர்ச்சிப் போக்கு

பலரும் கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்து பழகியதையடுத்து மின்வணிகத்திற்கு வரவேற்பு அதிகரித்தது. குறிப்பாக, அது குறித்த புரிதல் இல்லாத பல வணிகர்கள் தங்கள் வணிகத்தைப் பெருக்கும் நோக்கில் அதில் நுழைந்ததாகக் குறிப்பிட்டனர். மின்வணிகத் தளங்களும் தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்தின.

கூகல், தெமாசெக், பெயின் அண்டு கம்பனி எனும் நிர்வாக ஆலோசனை நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2020ஆம் ஆண்டு மின்வணிக விற்பனை 4.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்ந்து 2021, 2022 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டது.

இது தொடரும் எனும் போக்கு நிலவிய நேரத்தில், தொய்வடைந்து மின்வணிக நிறுவனங்களைப் பாதித்தது. அதனைத் தொடர்ந்து, ‌‌‌ஷாப்பி, லஸாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டன. மிகவும் தொய்வடைந்த நிலையில் ‘Qoo10’ நிறுவனம் தனது 80 விழுக்காடு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

இவை தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் எனும் கருத்து நிலவினாலும் இச்சந்தையின் வளர்ச்சி மெதுவடைந்துள்ளதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.

மின்வணிகத் தளங்களில் இந்திய வணிகங்கள்

இந்திய வணிகங்கள் பெரும்பாலும் ஷாப்பி, லஸாடா, ஃபூட் பாண்டா, ரெட் மார்ட் உள்ளிட்ட தளங்களில் இயங்குகின்றன. சில நிறுவனங்கள் தங்களது சொந்த மின்வணிகமும் நடத்தி வருகின்றன.

நேரடி வணிகத்துடன், தங்கள் சொந்த மின்வணிகமும் நடத்தி வரும் ‘அஜ்மிர் ஸ்டோர்ஸ்’ நிறுவனம், ஷாப்பி தளத்திலும் கடந்த நான்காண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றது.

“பண்டிகைக் காலங்களில் மட்டுமே மின்வணிகம் மூலம் வணிகம் அதிகரிக்கிறது. சாதாரண நாள்களில் அது லாபகரமாக இல்லை,” என்றார் அதன் உரிமையாளர் முகமது ஃபைசல்.

“ஷாப்பி தளத்தில் கடை வைத்திருந்தாலும் அதற்கெனப் பெரும் செலவு செய்வதில்லை. தேவைக்கேற்ப சில நேரங்களில் விளம்பரம் செய்வோம். வணிகர்களைக் காட்டிலும், பயனாளர்களுக்கே மின்வணிகம் சாதகமாக இருக்கிறது எனக் கருதுகிறேன்,” என்றார் அவர்.

தங்கள் சொந்த மின்வணிகத் தளங்களை விட, அவற்றில் விநியோகக் கட்டணம் குறைவாக இருப்பது அவர்களுக்குச் சாதகமாக அமைவதாகச் சொன்னார். தொடர்ந்து, தற்போதைய காலகட்டத்தில் அதில் கவனம் செலுத்துவதை விட நேரடி வணிகத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது எனவும் நம்புவதாக அவர் சொன்னார்.

இவரது கருத்து இவ்வாறு இருக்க, ஷாப்பி தளத்தில் வணிகம் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார் ‘ரெசிகி மினிமார்ட்’ உரிமையாளர் ஷாகுல் ஹமீது. புதிதாகக் கடை திறந்துள்ள இவர், மின்வணிகத் தளம் இருந்தால் அதன் மூலம் தங்கள் கடை குறித்து பலருக்கும் தெரிய வரும் என நம்புகிறார்.

ஐம்பது வயதுடைய இவர், தமது கடையில், ‘ஷாப்பி’ நிறுவனப் பொருள்களை வாங்குவோரிடம், அவற்றை ஒப்படைக்கும் வசதி இருப்பதாகக் கூறினார்.

“பலரும் சிறு சிறு பொருள்களைக் கூட மின்வணிகம் மூலம் வாங்குவதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், மின்வணிகம் குறித்தும் அதிலுள்ள நன்மை தீமைகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்தும் என் மகனிடம் ஆலோசனை நடத்துகிறேன்,” என்றார்.

கூடிய விரைவில் தொடங்கும் திட்டத்தில் உள்ள இவர், மின்வணிகம்தான் எதிர்காலத்தில் அதிகம் இருக்கும் எனவும், அவ்வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்னும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

‘ஃபேர் மார்ட்’ எனும் மின்வணிகத் தளத்தில் இயங்கும் ‘ஆனந்தம் டிரேடர்ஸ்’ உரிமையாளரான ரியாஸ் தங்கள் வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டினர் நேரில் வந்தே வாங்குவதாகத் தெரிவித்தார்.

“ஷாப்பி உள்ளிட்ட தளங்களில் வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள், பற்றுச்சீட்டுகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. எனினும், இந்தியச் சமூகத்தினரைப் பொறுத்தவரை மின்வணிகத்தில் பொருள்கள் வாங்கும் போக்கு குறைந்தே இருக்கிறது,” என்றார்.

இவரது கருத்தைக் கிட்டத்தட்ட ஆமோதித்தே பேசினார், உணவு, மாளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் ‘ஜூனியர் குப்பண்ணா’ உரிமையாளரும், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கத்தின் (லிஷா) துணைத் தலைவருமான பிரகாஷ்.

“மின்வணிகம் சற்றே பெருகி வந்த நிலையில் புதிய கிடங்கு, இணையத்தளம், அதற்கான ஊழியர்கள் என அதிகளவில் முதலீடு செய்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்டவில்லை. எனவே, உணவு தவிர பிற பொருள்களின் இணையவழி வணிகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். மீண்டும் தொடங்கினாலும் சிறிய அளவில் மட்டுமே செய்ய முடியும் என நினைக்கிறேன்,” என்றார் பிரகாஷ்.

தொடர்ந்து, “சிறு பொருள்களுக்குக் கூட உச்ச நேரங்களில் விநியோகக் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். அது வணிகர்களுக்குச் சிரமத்தை அளிக்கிறது,” என்றும் தெரிவித்தார்.

தவிர, பெரும்பாலும் லிட்டில் இந்தியா உள்ளிட்ட இடங்களில் வீட்டு உபயோகப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் வணிகர்கள், தொலைபேசி வழி தொடர்பு கொள்வோர்க்கு விநியோகம் செய்கின்றனர். இது, ஷாப்பி, ஃபூட் பாண்டா உள்ளிட்ட மூன்றாம் தரப்பு விநியோக ஊழியர்களை நிர்வகிப்பதை விட எளிதாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

உணவு, மளிகை, வீட்டுப் பொருள்கள் இவ்வாறு இருக்க, திறன்பேசி உள்ளிட்ட மின் சாதனங்களை மக்கள் நேரில் வந்து வாங்குவதில்லை எனும் கருத்து நிலவுகிறது.

“பெரும்பாலும் பல்வேறு வகை ஊடகங்கள் மூலம் கருவிகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து, வீட்டிலிருந்தபடியே மக்கள் வாங்குகின்றனர். கடைகளைவிட மின்வணிகத் தளங்களில் அவற்றுக்குச் சலுகைகளும் இலவசப் பொருள்களும் அதிகம் கிடைக்கின்றன. ‘அமேசான்’ போன்ற பொது மின்வணிகத் தளங்கள் மட்டுமன்றி, ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கெனப் பிரத்தியேகத் தளங்கள் அமைத்துள்ளன. அதில் வாங்குவோரே அதிகம். எனவே நாங்களும் அதில் விற்பனை செய்கிறோம்,” என்றார் ‘யூனிவர்செல் மொபைல்ஸ்’ கடை ஊழியர் செல்வம்.

‘டிக்டாக் ‌‌‌ஷாப்’ எழுச்சி

சமூக ஊடகமான ‘டிக்டாக்’ தொடங்கிய அதன் சொந்த மின்வணிகம் பெரும் எழுச்சி கண்டுள்ளது. ‘லைவ் ஸ்ட்ரீமிங்’ எனப்படும் நேரடிக் காணொளிகள் மூலம் பொருள் விற்பனை இளையர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உடைகள், அழகு சாதனப் பொருள்கள், பிற பராமரிப்புப் பொருள்கள் எல்லாத் தளங்களையும் விட, ‘டிக்டாக் ஷாப்பில்’ அதிகம் விற்பனையாகின்றன.

நிபுணர்கள் கருத்து

“இந்திய வணிகர்கள் மின்வணிகத்தில் ஈடுபடுவதற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்,” என்றார் லிட்டில் இந்தியா வணிகர்கள் மரபுடைமை சங்கத்தின் (லிஷா) தலைவர் ரகுநாத் சிவா.

“லஸாடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி, கலந்துரையாடல் அமர்வுகளை ஏற்பாடு செய்தோம். மின்வணிகம் தான் எதிர்காலம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனினும், வணிகர்கள் அடிப்படைச் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது,” என்றார்.

“தொடர்ந்து, ஒரு சிறு பொருளை வாடிக்கையாளர் மின்வணிகத் தளத்தில் வாங்கினால், அதனை அவர்களது கிடங்கிற்கு விநியோகிக்க வேண்டியுள்ளது. சமூக ஊடகம், நேரடி விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எளிதாகவும், செயல் விளைவுள்ளதாகவும் இருக்கிறது. எனவே, வணிகர்கள் அதிகம் முன்வருவதில்லை,” என்றார்.

‘ரெட்மார்ட்’ போன்ற சில தளங்கள், அவற்றில் வாங்கப்படும் பொருள்களுக்குத் தங்கள் நிறுவன ‘ஸ்டிக்கர்’ மட்டும் ஒட்டி, வணிகர்களே ‘கூரியர்’ முறையில் அனுப்பும் வசதியைச் செய்து தருகிறது. இதனைச் சிலர் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு, புதிய மேம்பாடுகள் வர, வணிகர்கள் அதற்கேற்ப மாறுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் சொன்னார்.

மின்வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களுக்கு அரசாங்க மானியங்கள் கிடைக்கின்றன. ஆனாலும், குறிப்பாக இந்திய வணிகர்கள் பலர் அதனைப் பயன்படுத்துவதில்லை,” என்றார் சிங்கப்பூர் தெற்காசிய வணிகத் தொழிற்சபைத் தலைவர் சின்னு பழனிவேலு.

“விநியோகம் தவிர, மின்வணிகம் தொடங்குவதற்கான முன் முதலீடுகள், ஏற்பாடுகள் செய்வதிலும் சிரமம் நிலவுகிறது,” என்றார்.

எனினும், இங்கு மட்டுமன்றி மின்வணிகத்தில் நுழைவது உலகளவில் பல நாடுகளுக்கும் விநியோகம் செய்ய முயலும் தொழில்களுக்குச் சிறந்த முதற்படியாக அமையும் என்றும் சொன்னார் அவர்.

குறிப்புச் சொற்கள்