தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியரைத் திட்டித் தீர்த்த பொறியாளருக்கு அறிவுரை: நிலப் போக்குவரத்து ஆணையம்

2 mins read
feca4ef0-aad5-4797-897e-ef36fedba3c2
ஊழியரின் தலைக்கவசத்தை ஏதோ ஒரு பொருளைக் கொண்டு அந்தப் பொறியாளர் அடித்ததைக் காணொளியில் பார்க்க முடிந்தது. அது அந்த ஊழியரின் வாகனம் ஓட்டும் உரிமம் என்று நம்பப்படுகிறது. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலாண்ட்டே/ ஃபேஸ்புக்

நிலப் போக்குவரத்து ஆணைய ஒப்பந்ததாரரின் ஊழியரை ஆணையத்தின் பொறியாளர் ஒருவர் தானா மேராவில் அமைந்துள்ள பணியிடத்தில் திட்டுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காணொளி சிங்கப்பூர் ரோடு விஜிலாண்ட்டேயின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) பதிவேற்றம் செய்யப்பட்டது.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நிலவரப்படி 147,000 பேர் அதைப் பார்த்தனர்.

பொறியாளர் நடந்துகொண்ட விதம் குறித்து குறைந்தது 370 பேர் தங்கள் கருத்துகளைப் பதிந்தனர்.

அதே காணொளி வேறு சமூக ஊடகத்தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பணியிடத்தில் மஞ்சள் தலைக்கவசம் அணிந்த ஒருவரை வெள்ளைத் தலைக்கவசம் அணிந்த ஒருவர் கண்டிப்பதைக் காணொளி காட்டியது.

ஊழியரின் வாகனம் ஓட்டும் உரிமம் குறித்தும் அவர் என்ன கற்றுக்கொண்டார் என்பது குறித்தும் பொறியாளர் கேள்வி எழுப்பினார்.

ஊழியரின் தலைக்கவசத்தை ஏதோ ஒரு பொருளைக் கொண்டு அந்தப் பொறியாளர் அடித்ததைக் காணொளியில் பார்க்க முடிந்தது. அது அந்த ஊழியரின் வாகனம் ஓட்டும் உரிமம் என்று நம்பப்படுகிறது.

கட்டுமானம் தொடர்பான பணியிடங்களில் மேற்பார்வையாளர் பதவியில் இருப்பவர் வெள்ளைத் தலைக்கவசம் அணிந்திருப்பர். உதாரணத்துக்குப் பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள் ஆகியோர் வெள்ளைத் தலைக்கவசம் அணிந்திருப்பர்.

மேற்பார்வையாளர் பதவியில் இல்லாத ஊழியர்கள் மஞ்சள் தலைக்கவசம் அணிந்திருப்பர்.

அந்த ஊழியர் சென்ற வாகனம் ஓட்டும் பயிற்சிப் பள்ளியில் அவருக்கு என்ன கற்பிக்கப்பட்டது என்றும் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பு வார் அணிய அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டதா என்றும் அந்தப் பொறியாளர் ஊழியரிடம் கேட்பதைக் காணொளியின் காண முடிந்தது.

பிறகு, ஊழியரின் அட்டையை அந்தப் பொறியாளர் தரையில் வீசினார்.

இந்தச் சம்பவம் குறித்து தனக்குத் தெரியும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 25) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

வேலையிடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகளை அந்தப் பொறியாளர் எதிர்கொண்டபோதிலும் அவர் கையாண்ட அணுகுமுறை முறையற்றது என்று ஆணையம் கூறியது. அத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ளப்படாது என்று அது தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுரை கூறப்பட்டதாகவும் ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடத்தை குறித்து அவருக்கு நினைவூட்டப்பட்டதாகவும் ஆணையம் கூறியது.

தமது செயலுக்கு அந்தப் பொறியாளர் வருத்தம் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட ஊழியரிடம் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்