‘என்டர்பிரைஸ் 50’ விருதுகளில் பொறியியல், கட்டுமான நிறுவனங்கள் சாதனை

‘என்டர்பிரைஸ் 50’ விருதுகளில் பொறியியல், கட்டுமான நிறுவனங்கள் சாதனை

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 12:18 pm

2 mins read

‘என்டர்பிரைஸ் 50’ விருதுகளின் 32வது பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வெற்றியாளர்களில், சிறப்புக் கட்டுமானத் தீர்வுகளை வழங்கும் ‘மில்லெனியம் 3 பில்டிங் புராடக்ட்ஸ்’ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திங்கட்கிழமை (நவம்பர் 23) இரவு நடைபெற்ற விழாவில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

தொழில்நுட்பப் புத்தாக்கத்தையும் நிலைத்தன்மையையும் ஒன்றிணைத்து நீடித்து நிலைக்கும் தீர்வுகளை வழங்கியதற்காக உயர்த்தப்பட்ட தரைத்தள நிபுணத்துவ நிறுவனமான மில்லினியம் 3 பாராட்டப்பட்டது. மின்னிலக்க உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், தரவு மையங்களின் அடிப்படைக் கட்டமைப்பில் இந்நிறுவனத்தின் தரைத்தளங்கள், கூரை அமைப்புகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையிலும், வணிகச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைப்பு உணர்வு ஆகியவற்றைக் கொண்ட தனியார் உள்ளூர் நிறுவனங்களைக் கௌரவிக்கும் வகையிலும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில் தீத்தடுப்புப் பொறியியல் நிபுணத்துவ நிறுவனமான ‘ரிக்கோ எஞ்சினியரிங் வொர்க்ஸ்’ இரண்டாம் இடத்தைப் பிடித்தது. உயிர்பாதுகாப்பு அமைப்புகளை வடிவமைத்து, விநியோகித்து, பொருத்தி, சோதனை செய்து இயக்கும் பணிகளை ரிக்கோ மேற்கொள்கிறது. இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டில் இவ்விருதைப் பெற்ற இந்நிறுவனம், தற்போது மூன்றாவது முறையாக அச்சிறப்பைப் பெற்றுள்ளது.

பளுதூக்கி வாடகை, கனரகப் போக்குவரத்து, கடல்துறைத் தளவாடச் சேவைகள், எஃகு கட்டமைப்புத் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ‘பொலிசம் குழுமம்’ மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

செந்தோசாவில் உள்ள ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற இந்த வருடாந்தர விருது விழாவை ‘பிஸ்னஸ் டைம்ஸ்’, சிங்கப்பூரின் ‘கேபிஎம்ஜி’ ஆகியவை இணைந்து நடத்தின. ஓசிபிசி வங்கி இதற்கு ஆதரவு நல்கியது. என்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சிங்கப்பூர்ப் பங்குச்சந்தைக் குழுமம் ஆகியவையும் இவ்விழாவிற்கு ஆதரவளித்தன.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் (எரிசக்தி, தொழில்துறை) டான் சீ லெங், நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள மூன்று முக்கிய முன்னுரிமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

புத்தாக்கத்தைத் தங்கள் வணிகச் செயல்பாட்டின் ஓர் அங்கமாக மாற்றுவது, நிலைத்தன்மைக்கான செலவினங்களைத் தாண்டி அது உருவாக்கும் வாய்ப்புகளை அடையாளம் காண்பது, நீடித்த தனிச்சிறப்பைத் தரும் ஆற்றல்களில் முதலீடு செய்வது ஆகியவையே அந்த மூன்று முன்னுரிமைகளாகும்.

தொடர்ச்சியான புத்தாக்கமானது நிறுவனங்கள் மாற்றங்களுக்கு முன்னால் இருக்க உதவுவதால், இந்த மூன்று முன்னுரிமைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று அவர் குறிப்பிட்டார்.

“இன்றிரவு நாம் கொண்டாடுவது இந்தத் தொழில்முனைப்பு உணர்வைத்தான். ‘என்டர்பிரைஸ் 50’ வெற்றியாளர்கள் பழக்கமான சந்தைகளைத் தாண்டிச் செல்லும் துணிச்சலையும் சவால்களை முறியடிக்கும் உறுதியையும் முன்னோக்கிச் செல்வதற்கான புதிய வழிகளைக் கண்டறியும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளனர்,” என்று அமைச்சர் டான் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்