தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆங்கிலத்திலிருந்து அன்னை தமிழுக்கு

3 mins read
3abc286b-7089-4573-ad36-bc5ccf676470
மானவர்களுக்கு பாடம் நடத்தும் வைஷானவி. - படம்: பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளி

பிள்ளைகள் என்றால் அளவுகடந்த அன்பு எனக் கூறும் 33 வயது வைஷானவி செல்வசேகரன், பிள்ளைப்பருவக் கல்வி உலகில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அடி எடுத்து வைத்தார்.

இளம் பிள்ளைகளுக்கு எண், எழுத்து கற்பிப்பதற்கு அப்பாற்பட்டு குழந்தைகளின் முதல் சொற்கள், அனுபவங்கள் மூலம் அவர்களுக்கு நற்பண்புகளை ஊட்டுவது, உணர்வுபூர்வ வளர்ச்சியை வித்திடுவது போன்றவையும் அடங்கியுள்ளது என அவர் நம்புகிறார்.

தோ பாயோ ஈஸ்ட் புளோக் 232ல் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் தமிழ்மொழி முதன்மை ஆசிரியராகப் பணியாற்றும் வைஷானவி, ஆசிரியர் தினமான இன்று, குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியராக இருப்பது தமக்குத் திருப்தி அளிப்பதாகச் சொன்னார்.

பிள்ளைகள் பட்டம் பெற்று ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற பிறகும் தன்னைவந்து சந்திப்பது, தங்கள் பாலர் பள்ளி நாட்களை அவர்கள் மறவாமல் இன்னும் நினைவில் வைத்திருப்பதற்குச் சான்று என வைஷானவி கூறினார்.

தற்போது அவர் தமிழ் ஆசிரியராக இருந்தாலும் தமது கல்வி கற்பிக்கும் பயணத்தை ஆங்கிலம் புகட்டுவது மூலம் தொடங்கினார்.

“முன்னோடி திட்டம் மூலம் நான் தமிழ்மொழி கற்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடக்கத்தில் அது சவலாகத்தான் இருந்தது என்றாலும் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே தங்கள் தாய்மொழிமீது பற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையால் ஊக்கம் பெற்றேன்,” என்று தெரிவித்தார் வைஷானவி.

ஆங்கிலம் பேசாத தாத்தா, பாட்டி, குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் பிள்ளைகள் தாய்மொழியில்தான் பேச முடியும் என்பதால், தாய்மொழி ஆர்வத்தை இளம் பருவத்திலேயே விதைக்க வேண்டும் என்பதில் வைஷானவி உறுதியாக இருந்தார்.

தமிழ்மொழிமீது தான் வைத்துள்ள ஆர்வமும் தமக்குத் தொடர்ந்து உந்துதலாக இருப்பதாக அவர் சொன்னார்.

கற்றல் அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனுடன்பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“அந்தச் சிறுவன் யாருடனும் பேசாமலும் பழகாமலும் இருந்தார். தனியாக விளையாடவே விரும்பினார். தன்னை யாரும் தொட்டாலும் அவருக்குப் பிடிக்காததால் அவரிடம் பிணைப்பை ஏற்படுத்துவது சற்று சவாலாக இருந்தது. அதைக் கடக்க அவனிடம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினேன்,” என்றார் வைஷானவி.

காலப்போக்கில் வகுப்பறையைப் பாதுகாப்பு இடமாக அச்சிறுவன் கருதத் தொடங்கியதாகவும் பள்ளி ஆண்டு முடியும் வேளையில் தன்னைப் பெயர் சொல்லி அச்சிறுவன் அழைத்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வேகத்தில் வளர்கிறார்கள் என்பதையும் பொறுமை, நேரம், நிதானம் போன்றவை இருந்தால் சிறிய முன்னேற்றங்கள் கூட மிகவும் அர்த்தமுள்ள சாதனைகளாக மாறும் என்பதையும் தனக்கு அந்த அனுபவம் உணர்த்தியதாக அவர் தெரிவித்தார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் தனது நிலையத்தில் உள்ளடக்கிய ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பையேற்ற அவர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பாலமாக விளங்குகிறார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் தனது நிலையத்தில் உள்ளடக்கிய ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை எடுத்த வைஷானவி வகுப்பு ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான பாலமாக விளங்குகிறார்.
ஈராண்டுகளுக்கு முன்னர் தனது நிலையத்தில் உள்ளடக்கிய ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை எடுத்த வைஷானவி வகுப்பு ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான பாலமாக விளங்குகிறார். - படம்: பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளி

உடன் பணிபுரிபவர்களின் சவால்களைப் புரிந்துகொள்வதற்கு சிறிய குழு விவாதங்களை நடத்துவது, பின்னர் குழந்தைகளுடன் உத்திகளை வெளிப்படுத்திக் காட்டுவதன் மூலம் வகுப்பறைக்குள் ஆதரவை வழங்குவது போன்றவற்றில் அவர் ஈடுபட்டார்.

காலப்போக்கில் சிறந்த நடைமுறைகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைந்த கல்வி, பயிற்சி மாநாட்டில் அவற்றை வழங்கியதாகவும் வைஷானவி கூறினார்.

வளரும் இளம் குழந்தைப் பருவக் கல்வியாளர்கள் ஒவ்வொரு குழந்தையையும் புரிந்துகொண்டு அவர்களின் ஆற்றல்களைக் கண்டறிய நேரம் எடுத்துக்கொள்வது நல்லது என்றார் வைஷானவி.

குறிப்புச் சொற்கள்