தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களின் திறன் மேம்பாட்டில் ஆங்கில ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு: டெஸ்மண்ட் லீ

2 mins read
ff5ec6e8-fed3-4cc8-adca-3b9dc8605831
அமைச்சர் டெஸ்மண்ட் லீயிடமிருந்து (வலது) ஆங்கில மொழிக்கான நல்லாசிரியர் விருது பெற்றுக்கொண்ட டாக்டர் சரவணன் மணி (இடமிருந்து 2வது). உடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் ஜேமி ஹோ (இடது). - படம்: அனுஷா செல்வமணி

ஆங்கில மொழி சிங்கப்பூருக்குப் போட்டி சார்ந்த மேம்பாட்டை அளித்துள்ளதாகவும் அது சிங்கப்பூரை உலகத்துடன் இணைக்க உதவுவதாகவும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

“உலக நிறுவனங்கள் நம் நாட்டில் தளம் அமைக்க ஒரு மையமாக இருப்பதற்கும், நமது மக்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்குவதற்கும் ஆங்கில மொழி உதவுகிறது,” என்று திரு லீ கூறினார்.

தொழிலாளர்களும் நிறுவனங்களும் வெளிநாடுகளில் கால்பதித்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆங்கிலம் உதவுவதாகவும் அவர் சொன்னார்.

புதன்கிழமை (1 அக்டோபர்) நடைபெற்ற ஆங்கில மொழிக்கான நல்லாசிரியர் விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது அமைச்சர் டெஸ்மண்ட் லீ இவ்வாறு பேசினார்.

பல இன, பல மொழி மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஆங்கில மொழி, அனைத்திலும் மக்கள் தொடர்புகொள்ள வழியமைப்பதாக திரு லீ சொன்னார்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, காலநிலை மாற்றத்தின் தாக்கம், மூப்படையும் மக்கள்தொகை, மாறிவரும் உலகளாவிய ஒழுங்குமுறையின் நிலையற்ற தன்மை போன்ற சவால்கள் பற்றிய உரையாடல்களில் ஈடுபட பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி கைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆங்கில மொழி ஆசிரியர்கள் பற்றிப் பேசிய அவர், மாணவர்களின் சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்த உதவுவது, நுணுக்கமான வாதங்களை உருவாக்குவது, சிக்கலான நூல்களைப் புரிந்துகொள்ள வைப்பது போன்றவற்றில் அவர்களின் திறனைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் பெரும்பங்காற்றுவதாகப் பாராட்டினார்.

தொழில்நுட்பம் பரிணாமம் காணும்போது ஆங்கில மொழியைக் கற்பிப்பது பற்றித் தமது உரையில் குறிப்பிட்ட திரு லீ, செயற்கை நுண்ணறிவால் முடியாத, நட்பார்ந்த அணுகுமுறையை ஆசிரியர்கள் மேற்கொள்வதாகச் சொன்னார்.

“ஆசிரியர்களே திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்க மாணவர்களுக்குக் கற்றுத் தருகின்றனர். தொழில்நுட்பத்தை எவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்துவது என்பதற்கும் அவர்களே முன்மாதிரியாக விளங்குகிறார்கள்,” என்று திரு லீ மெச்சினார்.

கல்வி அமைச்சின் ஆதரவோடு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும் ‘நல்ல ஆங்கிலம் பேசுவோம்’ இயக்கமும் இணைந்து 18வது முறையாக இந்த விருது விழாவை சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பக வளாகத்தில் நடத்தின.

இவ்வாண்டு ஆங்கில மொழிக்கான நல்லாசிரியர் விருதில் கற்பித்தல் பிரிவில் விருது பெற்றவர்களில் இந்தியர்கள் இருவர் அடங்குவர்.

உயர்நிலைப் பள்ளி பிரிவில் சிஎச்ஐஜே செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளியில் பணியாற்றும் திருவாட்டி உமா ராமகிருஷ்ணன் ஜேக்கப், 39, விருது பெற்றுக்கொண்டார்.

மாணவர்களின் விமர்சன சிந்தனையைத் தூண்ட பங்கேற்பாளர் கலந்துரையாடல்கள், பொது ஆலோசனைகள் போன்ற உண்மையான கற்றல் அனுபவங்களை உருவாக்குபவர் திருவாட்டி உமா.

திருவாட்டி உமா ராமகிருஷ்ணன் ஜேக்கப்.
திருவாட்டி உமா ராமகிருஷ்ணன் ஜேக்கப். - படம்: ‘நல்ல ஆங்கிலம் பேசுவோம்’ இயக்கம்

தொடக்கக் கல்லூரி பிரிவில் ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளியில் பணியாற்றும் டாக்டர் சரவணன் மணி, 38, விருது பெற்றுக்கொண்டார்.

மாணவர்களுக்குச் சவால்விடுக்கும் வகையில், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான கேள்விகளைப் பயன்படுத்துவதோடு, உரையாடல்கள் மூலம் அவர்களின் விமர்சனச் சிந்தனையை வளர்க்க முடியும் என்று டாக்டர் சரவணன் உறுதியாக நம்புகிறார்.

குறிப்புச் சொற்கள்