கணவரை இழந்த பெண்ணுக்கு வேலையில் தன்னம்பிக்கை அளித்த ஆங்கிலப் பயிற்சி

கணவரை இழந்த பெண்ணுக்கு வேலையில் தன்னம்பிக்கை அளித்த ஆங்கிலப் பயிற்சி

படம்: டெஸ்மண்ட் லீ/ஃபேஸ்புக்

22 Nov 2026 - 12:48 pm

2 mins read

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கணவரின் திடீர் மறைவுக்குப் பிறகு, தமது 43வது வயதில் இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய ஒற்றை வருமானம் ஈட்டும் நிலை திருவாட்டி மணிக்கு ஏற்பட்டது.

வாழ்க்கையை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள கடுமையாக உழைத்த அவர், தமது குடும்பத்துடன் வாடகை அடுக்குமாடி வீட்டிற்குக் குடிபெயர்ந்ததோடு, மனிதவளத் துறையில் வேலையையும் தேடிக்கொண்டார். இருப்பினும், 12 ஆண்டுகள் இல்லத்தரசியாக இருந்ததால், பணியிடத்தில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில் அவர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்.

தற்போது 49 வயதாகும் மணி, வீட்டில் தம் கணவர், பிள்ளைகளுடன் பெரும்பாலும் தமிழிலேயே பேசி வந்ததால், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதில் தயக்கம் கொண்டிருந்தார்.

இது, அலுவலகத்தில் தமது தன்னம்பிக்கையைப் பெரிதும் குறைத்ததாக நவம்பர் 17ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் முன்னோடித் திட்டம் ஒன்று, பிரிட்டிஷ் கவுன்சலில் ஆங்கில மொழிப் பயிற்சியை மேற்கொள்வதற்கான நிதியுதவியை அவருக்கு வழங்கியது. முன்னதாக, இத்தகைய பயிற்சியை மேற்கொள்வது அவரது நிதி நிலைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது.

2025ல் தாம் நிறைவுசெய்த 10 வாரகாலப் பயிற்சி, தமது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். இப்பயிற்சி தமது ஆங்கில இலக்கணத்தையும் எழுத்தாற்றலையும் மேம்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மணி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நிரந்தரவாசி ஆவார்.

“இப்போது எனக்கு எந்தக் கூச்சமோ பயமோ இல்லை. மற்றவர்களுடன் நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசுவதாக இப்போது பலரும் கூறுகிறார்கள்,” என்று மணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமது உண்மையான பெயரை வெளியிட விரும்பாமல் ‘மணி’ என்ற பெயரில் அறியப்பட விரும்பிய அவருக்கு, அதன் பின்னர் மனிதவள உதவியாளர் பணியில் சம்பள உயர்வும் கிடைத்தது.

அவருக்கு நிதியுதவி அளித்த ‘கிஃப்ட்-ஏ-ஃபேமிலி’ எனும் இத்திட்டம், நான்கு ஆண்டுகால முன்னோட்டக் கட்டத்துக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நவம்பர் 12ஆம் தேதி அறிவித்தது.

குறைந்த வருவாய்க் குடும்பங்களுக்கான அரசாங்க ஆதரவுக் கட்டமைப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில், 2028க்குள் ‘காம்லிங்க்+’ திட்டத்தின்கீழ் உள்ள குடும்பங்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இதர குடும்பங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்