குழந்தைச் சந்திப்பு மேம்பாட்டு ஆணை ஜனவரி 2ல் அமல்

2 mins read
மணவிலக்கு பெற்ற பெற்றோர்கள்
d8a9683c-13d8-4fb6-9be7-8522608ef829
புதிய உத்தரவுகளுக்கு ஏற்ற வகையில் மாதர் சாசனத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு 2022 ஜனவரியில் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மணவிலக்கு பெற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் காண்பதற்கான மேம்பட்ட உத்தரவுகள், 2025 ஜனவரி 2 முதல் நடப்புக்கு வருகின்றன.

பெற்றோர்களின் மணவிலக்கு வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தங்களது குழந்தைகளை அவர்கள் சந்திப்பதற்கான அமலாக்க நடவடிக்கையை வலுப்படுத்துவதற்கான நடைமுறைகள் அப்போது முதல் நடப்புக்கு வரும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்தது.

‘குழந்தைகளைச் சந்திப்பதற்கான உத்தரவுகளின் அமலாக்கம்’ என்று அழைக்கப்படும் அந்த நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளைச் சந்திப்பதற்கான உத்தரவுகளைச் சரிவர நிர்வகிக்கும் அதிகாரத்தை அது நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.

குறிப்பாக, குழந்தைகளைப் பராமரித்துத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் அந்தக் குழந்தைகளைச் சந்திக்கத் தமது துணைக்கு அனுமதி மறுத்து வழக்கு போடும்போது நீதிமன்றம் அந்த உத்தரவுகளை நிர்வகிக்கும்.

அதற்கேற்ற வகையில் மாதர் சாசனத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு 2022 ஜனவரியில் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

கட்டாய ஆலோசனை, நடுநிலைமை, சிகிச்சைத் திட்டங்கள், குடும்ப ஆதரவுத் திட்டங்கள் போன்றவை திருத்தப்பட்ட மாதர் சாசனத்தில் உள்ளடங்கும்.

இழப்பீட்டுச் செலவுகளும் அந்தக் கடுமையான நடைமுறைகளில் அடங்கும்.

உதாரணமாக, குழந்தைகளின் விடுமுறைப் பயணக் கட்டணம் அல்லது தங்குமிடத்திற்காக ஒருவரது முன்னாள் துணை செலவழித்திருக்கும் நிலையில் அவர் குழந்தைகளைச் சந்திக்கக்கூடாது என அனுமதி மறுக்கும் வேளையில் இழப்பீட்டுச் செலவு அளிக்க வேண்டி வரும்.

ஒரு முறை குழந்தைகளைச் சந்திக்க முன்னாள் துணை மறுத்துவிட்ட நிலையில் கூடுதல் வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.

உத்தரவுகளுக்கு இணங்கி நடப்பதை உறுதி செய்யப் பாதுகாப்பு உறுதிமொழிகள் வழங்குவதோடு செயல்திறன் பத்திரங்களையும் அளிக்க வேண்டும் என்பதும் மேம்படுத்தப்பட்ட நடைமுறையில் அடங்கும்.

குழந்தைகளைச் சந்திப்பதற்கான உத்தரவுகளை மீறும்போது இழப்பீட்டுச் செலவுகள், கட்டாய ஆலோசனை, செயல்திறன் பத்திரத்தை நிறைவேற்றுதல் போன்ற அம்சங்களும் அதில் இடம்பெற்று இருக்கும்.

குறிப்புச் சொற்கள்