குழந்தையின் முதல் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் பெற்றோருக்குக் கூடுதல் நிதி உதவி வழங்குதல், மேம்படுத்தப்பட்ட குழந்தைப் பராமரிப்பு தொடர்பான விடுப்பு ஆகியவை, அரசாங்கத்தின் பரிசீலனைக்காக மக்கள் செயல் கட்சி (மசெக) மகளிர் பிரிவு முன்வைக்கத் திட்டமிட்டுள்ள பரிந்துரைகளில் அடங்கும்.
திருமணம், பிள்ளைப்பேற்றுக்குச் சிங்கப்பூர் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதன் தொடர்பில் கருத்துகளைத் திரட்டும் முயற்சியில், கடந்த மே மாதம்முதல் அந்தப் பிரிவு பொதுக் கலந்துரையாடல்களை நடத்திவருகிறது.
ஆண்கள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கடந்த ஐந்துக் கலந்துரையாடல்களில், செலவுகள், நேரம், சுகாதாரம் குறித்து தொடர்ந்து கவலைகள் வெளிப்படுத்தப்பட்டதாக மசெக மகளிர் பிரிவின் துணைத் தலைவர் கான் சியாவ் ஹுவாங் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) ‘ஜங்ஷன் 8’ கடைத்தொகுதியில் நடைபெற்ற ஆறாவது அத்தகைய கலந்துரையாடலில் அவர் அதனைத் தெரிவித்தார்.
குழந்தை போனஸ் திட்டம் போன்ற நிதி உதவிகளைச் சிங்கப்பூரில் உள்ள திருமணமாகாத ஒற்றைப் பெற்றோர்க்கு நீட்டிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்க அப்பிரிவு திட்டமிடுகிறது.
அதோடு, குழந்தை, சிசுப் பராமரிப்புக்காகப் பெற்றோர் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலுத்தும் கட்டணங்களைக் குறைக்குமாறு மகளிர் பிரிவு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளவும் திட்டமிடுகிறது.
தங்களது வாழ்க்கைத்தொழிலைச் சமாளிக்கும் அதேவேளையில் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளப் போதிய நேரம் இருக்கிறதா என்பது பெற்றோர்க்கு இருக்கும் மற்றொரு கவலை என்று திருவாட்டி கான் குறிப்பிட்டார்.
மேலும், அதிகக் குழந்தைகளைக் கொண்டவர்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளைக் கொண்டவர்களுக்கும் போதுமான குழந்தைப் பராமரிப்பு விடுப்பு கிடைப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊழியர்களுக்குக் குழந்தை தொடர்பான விடுப்புகளை வழங்கும்போது முதலாளிகளுக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு மேம்பட்ட ஆதரவை வழங்க, இதன் தொடர்பில் அரசாங்கம் அவர்களுக்கு உதவ அதிகம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
‘மேக்கிங் இட் வொர்க்’ (Making it Work) என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெற்ற அந்தக் கருத்துத்திரட்டும் நிகழ்ச்சியில், குடும்பங்கள் உட்பட கிட்டத்தட்ட 120 பேர் கலந்துகொண்டனர்.

