மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத் திட்ட நிதி ஆதரவு அதிகரிப்படும்

முதல் முறை வீடு வாங்குவோர், குறைந்த வருமானத் தம்பதியருக்கு மேலும் உதவி

4 mins read
56947b2b-e150-461c-8e70-b81f228d2e5a
புக்கிட் பாத்தோக்கில் அமைந்துள்ள ஹார்மனி வில்லேஜ்@புக்கிட் பாத்தோக் குடியிருப்பில் உள்ள முதியோருக்கான வசதிகளுடன் கூடிய வீடுகளை இந்த ஆண்டு இறுதியில் குடியிருப்பாளர்கள் பெறுவர். - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

முதல் முறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டை வாங்க குறைந்த வருமானம் ஈட்டும் தம்பதிக்கு வீட்டு மானியம் அதிகரிக்கப்பட உள்ளது.

முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு, குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவினருக்கு மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத் திட்ட நிதி ஆதரவு அதிகரிப்பட உள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தனது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.

அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வீடுகள் கிடைப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை எடுத்துக்கூறிய பிரதமர் வோங், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ விரைவில் அதுகுறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வார் என்றார்.

தற்போது மேம்படுத்தப்பட்ட மசேநிதி வீட்டு மானியத் திட்டத்தின்கீழ் குடும்பங்களுக்கு $80,000 வரை மானியமும், முதல் புதிய அல்லது மறுவிற்பனை வீடு வாங்கும் ஒற்றையருக்கு $40,000 வரை மானியமும் வழங்கப்படுகிறது.

கட்டுப்படியாகக்கூடிய வீட்டுவசதி பற்றிய கவலைகள் குறித்துப் பேசிய திரு வோங், அதிகரித்துள்ள மறுவிற்பனை வீடுகள் விலை மக்களின் கவலைக்குரியதாகி உள்ளது என்று குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து மறுவிற்பனை விலை உயர்ந்து வருவதாக வீவக ஜூலை மாதம் வெளியிட்ட தகவல்கள் காட்டின.

கொவிட்-19 தொற்றுநோயால் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட இடையூறுகளே வீட்டு விலை உயர்வுக்குக் காரணம் என்று பிரதமர் வோங் கூறினார். இது புதிய குடியிருப்பு வீடுகளின் விநியோகத்தைக் குறைத்தது.

சந்தையை நிலைப்படுத்த, சொத்துவிலையை தணிக்கும் நடவடிக்கைகள், விநியோகத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரைப்பட்ட காலத்தில் 100,000 தேவைக்கேற்பக் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளை வெளியிட தேசிய வளர்ச்சி அமைச்சு உறுதியளித்ததை அவர் சுட்டினார். 2024 டிசம்பர் மாதத்திற்குள் 80,000க்கும் மேற்பட்ட வீடுகள் அறிமுகமாகும். 2025ல் இலக்கை அமைச்சு அடையும் என்று பிரதமர் வோங் கூறினார்.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கொவிட்-19 தொற்றுப் பரவலால் தாமதமான அனைத்து பிடிஓ திட்டங்களும் நிறைவடையும் என்றார் அவர்.

தற்போது பிடிஓ வீடுகளுக்கு முதல்முறையாக விண்ணப்பிக்கும் வரிசை எண் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதையும் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளதையும் திரு வோங் சுட்டினார்.

“பெரும்பாலான திட்டங்களுக்கான காத்திருப்பு நேரம் தற்போது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக உள்ளது. தேவைக்கு முன்னதாகவே கட்டுவதன் மூலம் இந்த நேரத்தைக் குறைப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. காலப்போக்கில், அதிகமான பிடிஓ திட்டங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்பு நேரமே இருக்கும்,” என்றார் அவர்.

புதிய பிரைம், பிளஸ் அல்லது வழக்கமான பிடிஓ பிரிவுகள் குறித்துப் பேசிய திரு வோங், இப்புதிய பிரிவுகளின்கீழ் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள செங்காங், பேஷோர், காலாங்/வாம்போவில் பிடிஓ திட்டங்கள் அடங்கும் என்று கூறினார்.

அரசாங்கத்தின் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்ற அவர், வீட்டு விலையின் விகிதம் வருமானத்துடன் ஒப்பிட எவ்வாறு குறைந்துள்ளது என்பதை விளக்கினார்.

மானியங்களுக்குப் பிறகு நான்கறை வீவக மறுவிற்பனை வீட்டின் சராசரி விலையின் விகிதம், சராசரி ஆண்டு குடும்ப வருமானத்துடன் ஒப்பிட, 2014 இல் இருந்ததைப் போலவே தற்போது 4.8 ஆக உள்ளது.

அதாவது ஒரு மறுவிற்பனை வீட்டின் விலை கிட்டத்தட்ட ஆண்டு வருமானத்தின் ஐந்து மடங்கு.

2014 ஆம் ஆண்டிலிருந்து, இந்த விகிதம் 4க்கும் கீழே குறைந்து, தொற்றுநோய் தாக்கியபோது 5 ஆக உயர்ந்தது.

“லண்டன், சிட்னி, ஹாங்காங் போன்ற உலகின் பெரும்பாலான முக்கிய நகரங்களைவிட தற்போதைய வீட்டு விலை - வருமான விகிதம் கணிசமாகக் குறைவு,” என்றார் அவர்.

“நீங்கள் பணிதொடங்கி, குடும்பம் அமைக்க விரும்பினால், ஒவ்வொரு வட்டாரத்திலும், உங்கள் வரவுசெலவுக்குள் கட்டுப்படியாகக் கூடிய விலையில் ஒரு வீவக வீடு இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்” என்று “அனைத்து இளம் சிங்கப்பூரர்களுக்கும்” அவர் வாக்குறுதியை தந்தார்.

வயதானவர்கள், ஒற்றையர்களின் வீட்டு வசதி குறித்தும் பிரதமர் பேசினார்.

முதியோருக்கான உதவியுடன் கூடிய குடியிருப்புகள்

முதியோருக்கான அதிகமான சமூகப் பராமரிப்பு குடியிருப்புகள் அறிமுகப்படுத்தப்படும். இது பராமரிப்பு சேவைகளுடன் இணைந்த முதியோருக்கு உகந்த வீட்டு வடிவமைப்பாகும்.

புக்கிட் பாத்தோக்கில், ஹார்மனி வில்லேஜ்@புக்கிட் பாத்தோக் குடியிருப்பில் அமைந்துள்ள அத்தகைய உதவியுடன் கூடிய முதல் வீடுகளின் சாவி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியிருப்பாளர்களிடம் அளிக்கப்படும் என்றார் திரு வோங்.

சுகாதார அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடு மாற விரும்பாத முதியோருக்காக தற்போதுள்ள வீடுகளை அவர்கள் நடமாட உகந்ததாக மாற்றுவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

வரும் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து, ஒற்றையர் தங்கள் பெற்றோருடன் அல்லது அவர்களின் வீட்டுக்கு அருகில் பிடிஓ வீடு வாங்கும்போது திருமணமான தம்பதியர் பெறும் அதே முன்னுரிமை சலுகையைப் பெறுவர்.

குறிப்புச் சொற்கள்