பயணிகளின் கருத்துகளால் மேம்பட்ட வட்ட ரயில் பாதை வழிகாட்டித் திரைகள்

பயணிகளின் கருத்துகளால் மேம்பட்ட வட்ட ரயில் பாதை வழிகாட்டித் திரைகள்

2 mins read
ஜூலை 2 முதல் மேம்பாடுகள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும்
65761543-e845-4b87-97f0-d841a5e91aa3
நான்கு வட்ட ரயில் நிலையங்களில் மே 29ல் நடந்த பயணிகளின் கருத்துக் கணிப்புக்குப் பிறகு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

வட்ட ரயில் பாதையில் உள்ள தளமேடை மின்னிலக்க வழிகாட்டித் திரைகளில் ரயில் விவரங்கள், பயணிகள் எளிதாக படிக்கும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜூலை 12ம் தேதி அப்பாதையின் ஆறாம் கட்டம் திறப்பதற்கு முன்னதாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 2ஆம் தேதி முதல் மேம்பாடுகள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படுகின்றன. புரோமினாட், எஸ்பிளனேட், புவன விஸ்தா, பாய லேபார் ஆகிய வட்ட ரயில்பாதை நிலையங்களில் மே 29ல் நடந்த பயணிகள் கருத்துரைப்புக்குப் பிறகு இந்த மேம்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிலப் போக்குவரத்து ஆணையம் இதன் விவரங்களை வியாழக்கிழமை (ஜூலை 2) அதன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டது.

மேம்பாடுகள் குறித்து நேர்மறையான கருத்துகளை ஆணையம் பெற்றதாகவும், வழிகாட்டிகளை மெருகூட்ட பலர் கருத்துகள் வழங்கியதாகவும் அது தெரிவித்தது.

“ஒவ்வொரு வகை பயணிக்கும் மாறுபட்ட விருப்பங்கள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்கிறோம்,” என்று ஆணையம் சொன்னது.

வலது சுழற்சி முறையிலும் இடதுசுழற்சி முறையிலும் ரயில் செல்லும் பாதையின் விவரங்கள் மின்னிலக்கத் திரையில் வெளியிடப்பட்டன. அதாவது, கடிகார முள் சுழலும் திசை (Clockwise), கடிகார முள் சுழலும் திசைக்கு நேர்மாறான திசை (Anticlockwise) என்ற வகையில் ரயில் செல்லும் திசை பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேம்பாட்டுக்குப் பிறகு, பொதுமக்கள் பார்வைக்கு மின்திரையில் எழுத்துகள் முன்பிருந்ததைவிட பெரிதாக்கப்பட்டுள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

முன்னதாக, ரயில் செல்லும் திசையைக் குறிக்கும் ஒரு பெரிய வட்டச் சின்னம், மின்னிலக்கத் திரையில் இடம்பெற்றிருந்தது. இறுதி நிலையம் அல்லது அடுத்த சந்திப்பு நிலையம் பற்றிய தகவல், திரையின் கீழ்ப்பகுதியில் சிறிய எழுத்துருவில் காட்டப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட மின்னிலக்கத் திரையில், வட்ட வடிவச் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன. இறுதி நிலையம் அல்லது அடுத்த சந்திப்பு நிலையம் பற்றிய விவரங்களும், வண்ணத்தில் அச்சிடப்பட்ட நிலையக் குறியீடும் பெரிதாக்கப்பட்டுள்ளன.

சேவைகள் முழு வளையத்தையும் கடந்து செல்கின்றனவா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ‘வலது சுழற்சி’ அல்லது ‘இடது சுழற்சி’ எனும் சொற்கள் இப்போது அவற்றின் பொதுவான திசையை விவரிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்