சிங்கப்பூர் வேலையிடங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறுகிய காலத்தில் வருமானத்தை ஈட்டவும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவியிருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
எனினும், உற்பத்தியையும் லாபத்தையும் அது பெருக்கியதாக இப்போதைக்குத் தெரியவில்லை.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திவரும் நிறுவனங்கள், அவற்றின் வருமானம் கிட்டத்தட்ட 16 விழுக்காடு அதிகரித்ததைக் கண்டுள்ளன.
அதே காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளும் கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு கூடியதாக வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்ட அறிக்கைமூலம் தெரியவந்துள்ளது.
“நிகர வேலைவாய்ப்பு வளர்ச்சியடைந்தாலும் ஒருசில வேலை இழப்புகள் ஏற்படவே செய்தன. ஆனால், புதிய வேலை நியமனங்கள்மூலம் அது ஈடுசெய்யப்பட்டது,” என்றார் தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணைய மூத்த பொருளியல் வல்லுநர் சாரா லியூ.
தற்போதைக்கு, அதிக வருமானம் ஈட்டுவோரும் இடைக்காலத் தொழில்துறை ஊழியர்களும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டால் அதிகம் பயனடைந்துள்ளனர்.
அதாவது, மாதந்தோறும் $7,000 முதல் $10,000 வரை சம்பளம் வாங்குவோரும் 35லிருந்து 44 வயதுக்கு இடைப்பட்டோரும் அதிகம் பயனடைவதாக ஆய்வு சுட்டியது.
அதிக வருமானம் பெறும் ஊழியர்களின் அன்றாட வேலைகளில் சிலவற்றைச் செயற்கை நுண்ணறிவே பார்த்துக்கொள்வதால் அத்தகையோரால் மனிதத் திறன்கள் தேவைப்படும் பிற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் தீவிரப்படுத்தும்போது வெவ்வேறு ஊதிய வரம்புகளையும் வயதையும் சேர்ந்த உள்ளூர் ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிப்பதாக அமைச்சின் பொருளியல் பிரிவின் முன்னாள் ஆராய்ச்சியாளருமான லியூ குறிப்பிட்டார்.
வர்த்தகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு இன்னும் ஆழமாகும்போது கூடுதல் ஊழியர்கள் வெவ்வேறு திறன்களைக் கற்றுக்கொள்ளலாம் அல்லது வெவ்வேறு பொறுப்புகளை வகிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் ‘மைகரியர்ஸ்ஃபியூச்சர்’ தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, கிட்டத்தட்ட எட்டு விழுக்காட்டு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுப் பயனீட்டாளர்களாக இருப்பதை லியூ சுட்டிக்காட்டினார்.
பெரிய நிறுவனங்களும் தகவல் தொடர்பு, மின்சாதனங்கள், நிபுணத்துவச் சேவைகள், நிதி, காப்புறுதி ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களும் மற்ற நிறுவனங்களைவிட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக்கூடும் என்று தெரிகிறது.
மொத்த விற்பனையிலும் செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் 18 விழுக்காடு கூடியதை லியூ சுட்டினார். அந்தத் துறையில் உள்ள வருமானமும் செயற்கை நுண்ணறிவால் 24 விழுக்காடு கூடியது.
தொடர்பு, தகவல் துறையில் செயற்கை நுண்ணறிவால் ஊழியர்களின் எண்ணிக்கை 19 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. அந்தத் துறையின் வருமானம் கிட்டத்தட்ட 23 விழுக்காடும் லாபம் ஏறக்குறைய 16 விழுக்காடும் கூடின.


