கல்வியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்த, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இத்துறைக்கு தற்காலிகப் பணியாளர்களை வழங்கும் சேவை நிறுவனங்களை ஆண்டிறுதியில் அமைப்பு நியமிக்க உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் நியமிக்கப்பட்டு, 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவு பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பிடம் தெரிவிக்கப்படும்.
கல்வியாளர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இந்த முயற்சியை அக்டோபர் 2022ல் முதன்முதலாக அறிவித்தார்.
உரிமம் பெற்ற 1,900 பாலர் பள்ளிகளுக்கு தற்காலிகப் பணியாளர்கள் அனுப்பப்படுவர் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘மை வோர்ல்டு@டாஸன்’ பாலர் பள்ளியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது அறிவித்தது.
கொண்டாட்டத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டு பாலர் பள்ளிக் கல்வியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா 32 கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோருடன் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
கொண்டாட்டத்தின் முதல் பகுதியாக மறுபயனீடு செய்யப்பட்ட பொருள்களால் ஆன ஆடைகளைத் தயாரித்த 12 மாணவர்களும் அவற்றை அணிந்து ஆடல்பாடலுடன் அதிபர் முன் வலம்வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அதிபர் தர்மனும் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுவாவும் பாலர் பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டனர். குழந்தைகளுக்கான நீர் விளையாட்டு மையம், முப்பரிமாண கற்றல் வளங்கள், நூலகம், மாணவர் கைவினைப் படைப்புகள், கல்வியாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஓய்விடம் போன்ற அம்சங்களைக் கண்டு களித்தனர்.
கொண்டாட்டத்தின் இறுதியில் இருவரும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்குத் தங்களின் பாராட்டுகளைத் தெரிவிக்க நன்றிக் குறிப்பையும் எழுதினார்கள்.
“குழந்தைகளின் வளர்ச்சியில் பாலர் பள்ளிக் கல்வியாளர்களும் பெற்றோரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்,” என்று கூறினார் திரு தர்மன்.
பள்ளியில் தற்போது 20 ஆசிரியர்களுடன் ஆறு பணியாளர்கள், 74 பாலர்களைக் கவனித்து வருகின்றனர்.
தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் முயற்சி, ஆரம்பக் கல்வியாளர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் 34 ஆண்டு அனுபவம் பெற்ற பாலர்க் கல்வியாளர் சாந்தி பாலகிருஷ்ணன், 52.
“ஆசிரியர் இல்லாவிட்டால், மற்ற கல்வியாளர்கள் மேலும் சில பணிகளைக் கையாள்வது கடினம். இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவி புரியும் தேர்ச்சிபெற்ற தற்காலிக ஆசிரியர்கள் எங்கள் வகுப்புகளை வழிநடத்த முடியும். இது கல்வியாளர்களுக்கு சற்று மன அமைதியை அளிக்கும்,” என்றார்.
வளங்களையும் மனிதவள நிலவரத்தையும் மேம்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் கல்வியாளர்கள் தங்களின் தேவைகளுக்கும் பள்ளிக்கூடப் பணிக்கும் இடையே சமநிலையைக் கடைப்பிடிக்க இயலும்.
‘மை வோர்ல்டு@டாஸன்’ பாலர் பள்ளியில் பயிலும் இரு மாணவிகளுக்குத் தாயாரான சோபியா பர்வின், 33, இந்த முயற்சியைப் பாராட்டினார்.
“தற்காலிகப் பணியாளர்களின் உதவியால் முழுநேர கல்வியாளர்கள் தங்களுடைய சொந்த கடமைகளையும் அவ்வப்போது கவலையின்றி கவனித்துக் கொள்ளலாம். ஆசிரியர் இல்லாத குறையைப் பற்றிப் பெற்றோரும் சிந்திக்கத் தேவையில்லை,” என்றார்.
தகுதியான தற்காலிகப் பணியாளர்கள், இவ்வாண்டு மார்ச் முதல் மே வரை பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் சேவைகளுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்த ஆதரவுத் திட்டத்துக்காக தற்காலிகப் பணியாளர்கள், மனிதவளம் அல்லது பணியாளர் சேவைகளை வழங்குவதில் குறைந்தது ஈராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பாலர் பள்ளிக் கல்வித்துறையில் பிற சேவைகள், நிர்வகித்தல் ஆகியவற்றில் குறைந்தபட்சம் அதே அளவு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நியாயமான கட்டணம் மற்றும் நம்பகமான சேவை தரமுள்ள தற்காலிப் பணியாளர்களைக் கொண்ட குழுவை எல்லா பாலர் பள்ளிகளும் பெறுவதை இந்நடவடிக்கை உறுதி செய்யும்.