பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

2 mins read
682dca2e-3230-4f56-b755-2f936a2f9030
ஆசிரியர்களுக்காக மேம்படுத்தப்படும் வசதிகள். - படம்: கல்வி அமைச்சு
Google News Preferred Icon

தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தக் கல்வி அமைச்சு படிப்படியாகப் பள்ளிகளில் இருக்கும் இணையக் கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்களுக்காகப் பள்ளிகளில் மேலும் அதிக மின்தூக்கிகள், சரிவுப்பாதைகள் போன்ற வசதிகள் அமைத்துத் தரப்படும் என்று கல்வி அமைச்சு திங்கட்கிழமை அதன் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை தமது தேசிய தினப் பேரணி உரையில் பள்ளிகளில் இருக்கும் வெவ்வேறு இடங்களும் உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியதை அடுத்து கல்வி அமைச்சு மாற்றங்கள் குறித்து இவ்வாறு அறிவித்துள்ளது.

மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தக் கல்வி அமைச்சு வசதிகள் செய்து தரும்.
மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தக் கல்வி அமைச்சு வசதிகள் செய்து தரும். - படம்: கல்வி அமைச்சு

வெவ்வேறு கற்றல் முறைகளுக்குத் தகுந்தாற்போல் மாணவர்களின் கற்றல் தளம் மேம்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, நகர்த்தக்கூடிய தடுப்புகள், மாற்றி அமைக்கக்கூடிய அறைகலன்கள் போன்றவை மேலும் அதிகமாகப் பயன்படுத்த வகைசெய்யப்படும்.

மாணவர்களுக்கிடையே அதிக பிணைப்பை ஏற்படுத்தவும் கற்றல் அனுபவம் இனிமையாக இருக்கவும் இந்த மாற்றங்கள் கைகொடுக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தக் கல்வி அமைச்சு கூடுதல் வசதிகள் செய்து தரும்.
மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தக் கல்வி அமைச்சு கூடுதல் வசதிகள் செய்து தரும். - படம்: கல்வி அமைச்சு

மாணவர்களை மையப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும், மேலும் அதிக குழு கலந்துரையாடல்களை ஊக்குவிக்கவும் உயர்நிலைப் பள்ளிகளில் இருக்கும் நூலக வசதிகளும், ஆராய்ச்சிக்கூடங்களும் மேம்படுத்தப்படும்.

பள்ளிகளுக்கும் சமூகத்திற்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்க கல்வி அமைச்சு தொடர்ந்து சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தோடு இணைந்து, இரட்டைப் பயன்பாட்டு முறையின்கீழ் பொதுமக்கள் பள்ளிகளில் இருக்கும் விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யும்.

சில பள்ளிகளில் இருக்கும் பாறை ஏறுதல் போன்ற குறிப்பிட்ட வசதிகள் இதர பள்ளிகளுக்கிடையே பகிர்ந்து பயன்படுத்தப்படும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையிலும் பள்ளிகளில் மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் மாற்றங்கள் செய்யப்படும். ஆசிரியர்கள் உணவுண்ண ஒதுக்கப்படும் சிற்றுண்டி அறைகள் கலந்துரையாடுவதற்கும் மேம்படுத்தப்படும்.

இதையொட்டிச் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங், “மாணவர்களின் கற்றல் தேவைகள் மாறிவிட்டன. மேலும், ஆசிரியர்களின் தேவைகளும் மாறிவிட்டதால் தொழில்நுட்பத்தைக் கொண்டு சிறந்த கற்றல் முறையைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

“புத்தகங்களை இரவல் பெறுவதற்கான இடமாக மட்டும் இருப்பதற்கு அப்பாற்பட்டு பள்ளி நூலக வசதிகள் கற்றலுக்கு அதிகம் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும். புதிய பள்ளிகளைக் கட்டும்போதும், இதர பள்ளிகளை மறுசீரமைக்கும்போதும் இந்த வசதிகள் உள்ளடங்கும். இதுபோல புதிய திட்டங்கள் வரும். இதற்குக் கல்வி அமைச்சு பேரளவில் முதலீடு செய்துள்ளது,” என்று குறிப்பிட்டார் திரு சான்.

குறிப்புச் சொற்கள்