நேப்பாளத்தில் அண்மையில் நடைபெற்ற மாபெரும் இளையர் எழுச்சி குறித்து, பங்கேற்ற ஆய்வாளர்கள் இருவர் தெற்காசிய ஆய்வுக் கழக (ISAS) அனைத்துலக மாநாட்டின் முதல் நாளில் தங்களது பார்வைகளை முன்வைத்தனர்.
அமெரிக்காவின் வடக்கு கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ரிச்சர்ட் பவுனாஸ், இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய, அனைத்துலக மேம்பாட்டுத் துறையின் தலைவர் பேராசிரியர் ஜீவன் ஆர். ஷர்மா ஆகியோர் இந்த உரைகளை இணைய நேரலை வழியாக திங்கட்கிழமை (மார்ச் 23) வழங்கினர்.
நேப்பாளத்தில் குமுறிக்கொண்டிருந்த கோபத்தின் ஆழமான காரணங்கள் என்ன என்பதையும் கருத்தரங்கின் இந்தப் பகுதி ஆராய்ந்தது. ஜனநாயக அளவிடப்படும் முறையில் உள்ள முரண்பாடுகள் குறித்து டாக்டர் பவுனாஸ் விளக்கியபோது, அடித்தட்டு இளையர்களின் அக்கறைகளையும் எண்ணப்போக்குகளையும் எழுச்சிக்கு முந்தைய ஆய்வுகள் சரியாகப் பதிவு செய்யவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களின் பங்கு, இளையர் போராட்டத்தின் அரசியல் எவ்வாறு சமூகத்தில் பரிணமித்து வந்தது என்பதைப் பற்றிப் பேராசிரியர் ஷர்மா விரிவாகப் பேசினார். இவர்கள் இருவரின் முழுமையான உரைகளும் நேப்பாளத்தின் சமகால அரசியல் மாற்றங்களைப் புரிந்துகொள்ள ஒரு தெளிவான கட்டமைப்பை வழங்குகின்றன.
ஜனநாயக அளவீட்டில் கோளாறு
உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வி-டெம் (V-DEM) எனப்படும் ஜனநாயக அளவீட்டு முறைகள் நேப்பாளத்தின் உண்மை நிலையைக் காண்பிக்கவில்லை என்று டாக்டர் ரிச்சர்ட் பவுனாஸ் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அளவீடுகளின்படி, 1980 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டுப் போர், அரச குடும்பக் கொலை போன்ற சில பின்னடைவுகளைத் தவிர்த்துப் பார்த்தால், நேப்பாளத்தின் ஜனநாயகம் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவே காட்டப்படுகிறது. ஆனால், ஜனநாயகம் உண்மையிலேயே வலுவடைந்து வருகிறது என்றால், செப்டம்பர் 2020 இளம் தலைமுறைப் போராட்டம் எதனால் வெடித்தது என்ற அடிப்படையான கேள்வியை அவர் எழுப்பினார்.
அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தையும் அனுகூலங்களையும் அரசாங்கத் தலைவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கும் ‘பாக் பண்டா’ (Bhag Banda) முறை நிலவுவதை டாக்டர் பவுனாஸ் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“அரசியல் கட்சிகள் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக இருப்பதற்குப் பதிலாக, அதிகாரத்தையும் வளங்களையும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வணிகக் கூட்டமைப்புகளாக மாறிவிட்டன,” என்று அவர் கூறினார். கல்வி நிறுவனங்கள், வனத்துறைப் பயனர் குழுக்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறை என மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளும் இந்த அரசியல் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று நிலைகளில் நேப்பாளப் பொருளியல்
நேப்பாளத்தின் பொருளாதாரத்தை மூன்று நிலைகளாகப் பிரித்து அவர் இதனை விளக்கினார்.
உயர்மட்டத்தில் உள்ள மிகச் சிறிய அனைத்துலக, உயர் தொழில்நுட்பத் துறை அரசியல் தலையீடுகளில் இருந்து தப்புகிறது. இதற்கு மாறாக நடுத்தர மட்டத்தில் உள்ள மக்களின் அன்றாடத் தேவைகளைச் சார்ந்த நிறுவனங்கள் முற்றிலுமாக அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்று டாக்டர் பவுனாஸ் கூறினார். அடிமட்டத்திலுள்ள ஏழைகளை அரசியல்வாதிகள் பொதுவாகக் கண்டுகொள்வதில்லை என்று அவர் கூறினார்.
இத்தகைய முறைகேடான அமைப்பு ஆதிக்க வர்க்கத்தினருக்கும் அரசியல் வாரிசுகளான “நெபோ பேபிஸ்” (Nepo babies) எனப்படும் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே சாதகமாக அமைவதாகக் கூறப்படுகிறது.
தங்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்படுவதைக் கண்ட இளையர்கள் இந்த ஊழல் அமைப்புக்கு எதிராகவே போராடினார்கள் என்றும், சமூக வலைத்தளங்களில் மக்கள் இந்த உண்மைகளை அம்பலப்படுத்துவதைத் தடுக்கவே போராட்டத்திற்கு முன்பு அரசாங்கம் இணையத்தளத்தை முடக்கியது என்றும் டாக்டர் பவுனாஸ் தெரிவித்தார்.
“நேப்பாளத்தின் புதிய அரசாங்கத்தின் வெற்றியானது, இதுபோன்ற மேல்தட்டு அளவீடுகளைக் கொண்டு கணிக்கப்படக் கூடாது என்றும், மாறாக அடிமட்ட அளவில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் அரசியல் தலையீடு எந்த அளவுக்குக் குறைகிறது என்பதைப் பொறுத்தே அமைய வேண்டும்,” என்றார் அவர்.
ஏற்றத்தாழ்வுக்கு வெளிச்சமிடும் சமூக ஊடகப் பதிவுகள்
மறுபுறம், பேராசிரியர் ஜீவன் ஆர். ஷர்மா தனது உரையில் 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் நேப்பாளத்தில் நடைபெற்ற ‘ஸி தலைமுறை’ (Gen Z) போராட்டத்தின் நேரடி அனுபவங்களையும் அதன் அரசியல் விளைவுகளையும் விரிவாகப் பதிவு செய்தார்.
ஊழல், செல்வாக்கு மிக்க அரசியல் வர்க்கத்தின் ஆதிக்கம் மற்றும் சமூக ஊடகத் தடை ஆகியவற்றுக்கு எதிராக வெடித்த இந்தப் போராட்டம், பணக்கார வாரிசுகளின் சொகுசு வாழ்க்கையையும், வறுமையால் வாடும் தொழிலாளர்களின் துயரத்தையும் ஒப்பிடும் மீம்ஸ் பதிவுகள் போராட்ட நேரத்தில் இணையத்தில் தீயாகப் பரவியிருந்ததைப் பேராசிரியர் ஷர்மா குறிப்பிட்டார்.
“செப்டம்பர் 8-ஆம் தேதி அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், காவல்துறையின் தாக்குதலைத் தவிர்க்கும் நோக்கில் இளையர்கள் பள்ளிச் சீருடை அணிந்து அடையாள அட்டைகளுடன் பங்கேற்றனர். பாடல்கள் பாடியும், முழக்கங்கள் எழுப்பியும் மிகவும் உற்சாகமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், நண்பகலுக்குள் வன்முறையாக மாறியது,” என்று அவர் கூறினார்.
முதல் நாளிலேயே 19 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அடுத்தடுத்த நாள்களில் மாண்டோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது. நேப்பாளத்தின் தற்கால வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் நாடாளுமன்றம், தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம், அதிபர் மாளிகை, அரசியல்வாதிகளின் வீடுகள் எனப் பல்வேறு முக்கிய இடங்களின் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த மாபெரும் மக்கள் திரட்சியின் விளைவாக வெறும் 36 மணி நேரத்திற்குள் நேப்பாளத்தின் அரசியல் களம் தலைகீழாக மாறியது என்று பேராசிரியர் ஷர்மா விவரிக்கிறார்.
“அப்போதைய பிரதமர் கே.பி. ஓலி தனது இல்லத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. ராணுவத்தின் தலையீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில், போராட்டம் தொடங்கிய நான்கு நாள்களுக்குள் 73 வயதான முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றார்,” என்று பேராசிரியர் ஷர்மா கூறினார்.
இளையர்களை அதிகம் முன்னிறுத்திய கட்சிகளால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 2026-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி புதிய தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்தத் தேர்தலில் ராஷ்டிரிய சுவதந்திர கட்சி (RSP) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வென்றது.
பழைய கட்சிகளின் வேட்பாளர்களில் ஆறு விழுக்காட்டினருக்கும் குறைவானோர் இளையர்கள். புதிய கட்சிகளிலோ 30 விழுக்காடு வரை 35 வயதிற்கு உட்பட்ட இளையர்கள் களமிறக்கப்பட்டனர். நேப்பாள நாடாளுமன்றத்தில் ஒரு மிகப்பெரிய தலைமுறை மாற்றத்தை இது உருவாக்கியுள்ளது.
தற்போது நேப்பாளத்தின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் இளையர்களாக இருப்பதும், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் இணையப் பயன்பாட்டினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதும் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்றார் பேராசிரியர் ஷர்மா.
இந்தப் போராட்டம் அனைத்துலக ஊடகங்கள் கூறுவது போல் திடீரென உருவானது அல்ல என்பதைப் பேராசிரியர் ஷர்மா வலியுறுத்தினார்.
“கடந்த பத்தாண்டுகளாக நிலநடுக்க நிவாரணப் பணிகள், கொவிட்-19 பெருந்தொற்று காலச் சேவைகள், ஊழலுக்கு எதிரான பரப்புரைகள் ஆகியவற்றின் வழி இந்த இளையர்கள் தங்களை சமூக அரசியலில் ஈடுபடுத்தி வந்ததன் தொடர்ச்சியே இந்த எழுச்சி,” என்று அவர் வாதிட்டார்.
இந்தப் போராட்டம் வெறுமனே ஆத்திரத்தின் வெளிப்பாடு அல்ல. இது ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்கான இளைஞர்களின் ஆக்கபூர்வமான அரசியல் ஈடுபாடு என்பதை இரு பேராசிரியர்களுமே ஒருமித்த கருத்தாகக் கூறுகின்றனர்.

