சட்டவிரோதச் செயல்களுக்காக கைப்பேசி ‘சிம்’ அட்டைகளைப் பதிவு செய்தது தொடர்பாக 52 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் 20 பேர் பெண்கள் என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை கூறியுள்ளது.
விசாரிக்கப்படும் 52 பேரில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 16 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஜனவரி 8ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் அவர்கள் சிக்கினர்.
இதர 17 பேர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகின்றனர். அவர்கள் 16 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சிம் அட்டைகளைப் பதிவு செய்து கொடுத்தால் ஒவ்வொரு சிம் அட்டைக்கும் $15க்கும் $20க்கும் இடைப்பட்ட ரொக்கப் பணம் தரப்படும் என்று சட்டவிரோதக் கும்பல்கள் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதற்கேற்ப, சந்தேக நபர்கள் 30 முதல் 69 சிம் அட்டைகள் வரைப் பதிவு செய்து, அவற்றை சட்டவிரோதக் கும்பல்களிடம் சேர்த்துள்ளனர்.
“உள்ளூரில் பதிவு செய்யப்பட்ட அந்த சிம் அட்டைகளை மோசடி, சட்டவிரோதக் கடன் தொழில், விலைமாதர் தொழில் ஆகியவற்றுக்கும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் குற்றக் கும்பல்கள் பயன்படுத்தும்,” என்று காவல்துறை கூறியுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்காக சிம் அட்டைகளைப் பதிவுசெய்து கொடுப்போருக்கு அதிகபட்சமாக $10,000 அபராதமும் மூன்றாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, சிம் அட்டைப் பதிவு நடைமுறையைக் கடுமையாக்குவதாகக் காவல்துறையும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
ஒருவர் அதிகபட்சமாக 10 முன்கட்டண (ப்ரிபெய்ட்) சிம் அட்டைகளை மட்டுமே தனது பெயரில் பதிவு செய்துகொள்ள முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை அவை அறிவித்துள்ளன.
அந்த நடைமுறை பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடப்புக்கு வருவதாகவும் அந்த இரு அமைப்புகளும் தங்களது கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

