சிங்கப்பூரின் உணவு, பானத் துறைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் (என்டர்பிரைஸ்எஸ்ஜி), தனியார் வாடகைக் கார் நிறுவனமான கிராப் ஆகியவை இணைந்து செயல்படவுள்ளன.
இதற்கான அறிவிப்பை அவ்விரு நிறுவனங்களும் திங்கட்கிழமை (ஜனவரி 19) வெளியிட்டன.
உணவு, பானத் துறையின் மீள்திறனை வலுப்படுத்துவது தொடர்பில் இணைந்து செயல்பட அவை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
அதிகரித்துவரும் செயல்பாட்டுச் செலவினம், வேலையாட்கள் தட்டுப்பாடு போன்ற முக்கிய சவால்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் அத்துறைக்குத் தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக அவை தெரிவித்தன.
அந்த மூவாண்டுக்கான ஒப்பந்தத்தின் மூலம் 12,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அவற்றின் வளர்ச்சி உத்திகளைச் செம்மைப்படுத்தத் தேவையான முக்கிய தரவுகள், தொழில்துறை நுண்ணறிவுகள் ஆகியவற்றைப் பெற உதவிகள் வழங்கப்படும் என என்டர்பிரைஸ்எஸ்ஜி, கிராப் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
ஒவ்வொரு ஆண்டும் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்குப் பயிற்சி அளிக்கும் வகுப்புகளில் பங்கேற்கும் அதே நேரத்தில் கிராப்பின் உணவகங்களுக்கான ‘டைன் அவுட்’ (Dine Out) பக்கத்தின் மூலம் அதிக பார்வையாளர்களைப் பெறுவர் என அதில் குறிப்பிடப்பட்டது.
வர்த்தகங்கள் தங்கள் சந்தைத் தெரிவுநிலையையும் வாடிக்கையாளர் தேவையையும் மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவது மட்டுமன்றி, வளர்ச்சி, மாற்றத்திற்கான புதிய திறன்கள், தரவு நுண்ணறிவுகள் ஆகியவற்றை வழங்குவதே இந்த உடன்பாட்டின் இரு முக்கிய அம்சங்களாகும்.
உணவகங்களின் தெரிவுநிலையை அதிகரிக்க கிராப்பின் ‘டைன் அவுட்’ பக்கத்தைப் பயன்படுத்துவது, வாடிக்கையாளர்களின் வருகையைக் குறைக்கும் அதே வேலையில் அவர்களின் தேவையையும் பூர்த்திசெய்யும் என அவ்விரு நிறுவனங்களும் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
பல வர்த்தகங்கள் புதிய தொழில்நுட்பங்களின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதிலும் அவற்றை வளர்ச்சிக்கு திறம்பட பயன்படுத்துவதிலும் சிரமப்படலாம் என அவை கூறின.
வாடிக்கையாளர்களின் போக்கு, மின்னிலக்கச் சந்தைக்கான சிறந்த நடைமுறைகளில் கவனம் செலுத்தும் அறிக்கைகளுக்கான இலவச அணுகலை உணவு, பானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் சிரமங்களுக்கு அந்த உடன்படிக்கை தீர்வுகாணும் என அவ்விரு நிறுவனங்களும் குறிப்பிட்டன.


