சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அரசாங்கத்தின் நிலைத்தன்மை ஆதரவுத் திட்டங்களையும் வளங்களையும் அணுக உதவியாக, SME Sustainability Hub என்ற புதிய இணையத்தளத்தை ‘எண்டர்பிரைஸ்எஸ்ஜி’ செவ்வாய்க்கிழமை (மே 6) அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறுவனங்களுக்கான திட்டங்கள், நிதி ஆதரவுத் திட்டங்கள், பயிற்சி, மேம்பாட்டுக்கான படிப்புகள், நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படத் தொடங்க உதவும் வழிகாட்டிகள் உள்ளிட்டவை வளங்களில் அடங்கும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் நிலைத்தன்மை குறித்து ஆர்வம் அதிகரித்து வரும் வேளையில், அதைச் செயல்படுத்துவது குறித்து பலருக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று எண்டர்பிரைஸ் எஸ்ஜி-யின் திறன்கள், தயாரிப்பு, கொள்கைக்கான உதவி நிர்வாக இயக்குனர் திரு. ஜெஃப்ரி யோ விளக்கினார்.
புதிய இணையத் தளம், உள்ளூர் வணிகங்கள் நிலையான நடைமுறைகளைப் பின்பற்ற தேவையான தகவல்களையும் ஆதரவையும் விரைவாக அணுக உதவும் ஒரு தளமாகச் செயல்படும் என்று அவர் கூறினார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான இணையத் தளத்தில் உள்ள நிறுவனங்களுக்கான ஆதரவுத் திட்டங்களில் ஒன்று, கரிம மேலாண்மை தீர்வுகளுக்கான உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியம்.
இது, சிறிய நடுத்தர நிறுவனங்கள் தங்கள் கரிம கணக்கீட்டு திறன்களை உருவாக்குவதன் மூலமும், கரிம உமிழ்வு குறித்து ஆலோசனைகளை வழங்குவதன் மூலமும் நீடித்த நிலைத்தன்மைக்கு உதவும்.
தங்கள் கரிம மேலாண்மை, அறிக்கை திறன்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல விழையும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், உமிழ்வுக் கணக்கீடுகள், கரிமத்தைக் குறைக்க இலக்கு நிர்ணயம், விநியோகச் சங்கிலி கரிம உமிழ்வு மேலாண்மை, அறிக்கை தயாரிப்பு ஆகியவற்றுக்கான ஆதரவை அந்தத் தளத்தில் பெறலாம்.

