என்டர்பிரைஸ்எஸ்ஜி அமைப்பு, அமெரிக்காவின் போஸ்டன் நகரில் அலுவலகம் திறந்துள்ளது.
அதன் மூலம் அமெரிக்காவில் சீராக இயங்க விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.
போஸ்டனில் திறக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ்எஸ்ஜி அலுவலகம், அமெரிக்காவில் அந்த அமைப்பு நடத்தும் ஐந்தாவது நிலையமாகும். சட்ட அமைச்சர் எட்வின் டோங் புதன்கிழமை (செப்டம்பர் 9) அந்நிலையத்தைத் தொடங்கி வைத்தார்.
மேலும், முதன்முறையாக என்டர்பிரைஸ்எஸ்ஜி, அமெரிக்க மாநிலம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அது, மசாசூசட்ஸ் அனைத்துலக வர்த்தகம், முதலீட்டு அலுவலகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அந்த ஒப்பந்தம், சிங்கப்பூருக்கும் மசாசூசட்சில் இயங்கும் வர்த்தகங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட தரப்புகளுக்கும் இடையே வாழ்க்கை அறிவியல், எரிசக்தி, இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு, அதிநவீன உற்பத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும்.
என்டர்பிரைஸ்எஸ்ஜி நிர்வாக இயக்குநர் சிண்டி கூ, “அமெரிக்கா தொடர்ந்து சிங்கப்பூர் நிறுவனங்களுக்கதான முக்கியச் சந்தையாக இருந்துவருகிறது. அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூர் நிறுவனங்குளிடையே அந்தச் சந்தைமீதான விருப்பம் அதிகரித்துவருகிறது,” என்று தெரிவித்தார்.
45 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
சிங்கப்பூரைச் சேர்ந்த 250க்கும் அதிகமான நிறுவனங்கள் அமெரிக்காவின் 45 மாநிலங்களில் தங்களது கிளைகளுடன் செயல்படுகின்றன. அந்த வகையில், உள்ளூர் வர்த்தகங்கள் இயங்கும் ஐந்து முன்னணி வெளிநாட்டுச் சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது.
போஸ்டனில் திறக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ்எஸ்ஜி நிலையம், அமெரிக்கச் சந்தையில் செயலாற்ற விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு சந்தைத் தகவல்களை வழங்குவது போன்ற வழிகளில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“போஸ்டனில் நாம் செயல்படுவது நமது வர்த்தக, தொழில்நுட்ப சமூகங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும், புதிய பங்காளித்துவங்களை உருவாக்கும், புத்தாக்கத்தைத் துரிதப்படுத்தும், அமெரிக்காவுக்கும் அதைத் தாண்டிய சந்தைகளுக்கும் புதிய தீர்வுகளைக் கொண்டுவரும்,” என்று திருவாட்டி கூ குறிப்பிட்டார்.
மசாசூசட்ஸ், அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் 150க்கும் அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் ஏற்கெனவே செயல்பட்டுவருவதாக அமைச்சர் எட்வின் டோங் நிகழ்ச்சியின்போது தாம் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
“போஸ்டன் வெளிநாட்டு நிலையம், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சிங்கப்பூர் நிறுவனங்கள் வலுவாகச் செயல்பட உதவும். நியூயார்க்கில் இருக்கும் என்டர்பிரைஸ்எஸ்ஜி அலுவகத்தின் முயற்சிகளுக்கு அது மேலும் கைகொடுக்கும்,” என்று திரு டோங் விவரித்தார்.

