சிங்கப்பூருக்குள் நுழைய மூவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 18ஆம் தேதி ஓர் ஆடவர், இருவருடன் சிங்கப்பூர் வந்தார்.
தானியக்கச் சாதனங்களில் அவர்கள் குடிநுழைவுச் சோதனையை மேற்கொண்டபோது அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கவனமாகப் பரிசீலித்த பிறகு அவர்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு காத்திருப்பு அறையில் தற்காலிகமாக மூவரும் அமர வைக்கப்பட்டனர்.
அந்தச் சமயத்தில் ஆடவர், அதிகாரிகளுக்குத் தெரியாமல் தன்னையும் சேர்த்து காணொளி எடுத்து டோயின் என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டார். பின்னர் அந்தப் பதிவு அகற்றப்பட்டது.
அந்தக் காணொளியில், சிங்கப்பூர் வந்ததும் தன்னைக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டதாக அவர் கூறியதாகத் தெரிகிறது. அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் படமோ அல்லது காணொளியோ எடுக்க அனுமதியில்லை.
காணொளியில் அங்கிருந்த நாற்காலிகள், தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அறிவிக்கும் அறிவிப்புப் பலகை உள்ளிட்டவை காட்டப்பட்டிருந்தன. அறையில் அவர் மட்டுமல்லாமல் ஓர் ஆடவரும் மூன்று பெண்களும் இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் வந்ததும் தான் இருட்டறையில் அடைக்கப்பட்டதாகக் கூறி காணொளியில் அவர் சிரித்துள்ளார்.
மதர்ஷிப் இது குறித்து விளக்கம் கேட்டபோது, சாங்கி விமான நிலையக் காத்திருப்பு அறையில் மூன்று வெளிநாட்டுப் பயணிகளையும் இதர சிலரையும் காட்டும் காணொளி பற்றி அறிந்திருப்பதாகக் கூறியது.
சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மூவரும் மறுநாள் (ஜனவரி 19) காலை அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சட்டப்படி, குடிநுழைவுத் துறையின் குடிநுழைவு அறை, அலுவலகம் உள்ளிட்டவற்றை படம் எடுப்பது குற்றமாகும்.
இதை மீறி படமெடுத்தால் 20,000 வெள்ளி அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

