தொடக்கநிலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் பணிகள் 38% குறைந்தன: ஆய்வறிக்கை

தொடக்கநிலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் பணிகள் 38% குறைந்தன: ஆய்வறிக்கை

2 mins read
d96ad74a-63b5-4522-9ee4-2b6d72df064f
இளநிலைத் தொழில்நுட்பப் பணிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், அந்தப் பணிகளுக்கான தகுதிகளில் ஒரு ‘கட்டமைப்பு மேம்பாடு’ ஏற்பட்டுள்ளதை அக்சென்ச்சர் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2022க்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப (ICT) வேலைவாய்ப்புகள் 38 விழுக்காடு குறைந்துவிட்டன.

கொவிட்-19 தொற்று உச்சத்தை எட்டிய காலத்திற்குப் பிறகு, மற்ற அனைத்துத் துறை வேலைகளையும்விட தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறையில்தான் மிகக் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

அக்சென்ச்சர் ஆலோசனை நிறுவனம் திங்கட்கிழமை (மே 11) வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையின்படி, இளநிலை தொழில்நுட்பப் பணிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், அந்தப் பணிகளுக்கான தகுதிகளில் ஒரு ‘கட்டமைப்பு மேம்பாடு’ ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

வழக்கமான, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கும் பணிகளே இந்தச் சரிவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

தானியக்கமயமாக்கலால் தற்போது அத்தகைய பணிகள் குறைந்து வருகின்றன.

“வேலைவாய்ப்புகள் மறைந்துவிடவில்லை. 2025ல் தொடக்கநிலை வேலை அறிவிப்புகள் எட்டு விழுக்காடு மீண்டும் அதிகரித்தன. ஆனால், அந்த வேலைகளுக்குத் தேவைப்படும் திறன்கள் அடிப்படை அளவிலேயே மாறிவிட்டன,” என்று அக்சென்ச்சர் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்சென்சரின் இந்த அறிக்கை ‘டேலன்ட் ரீஇன்வென்டர்ஸ்’ ஆய்வின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஆய்வு, 2025 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே, 12 நாடுகளில் 20 துறைகளைச் சார்ந்த 1,320 தலைமைப் பொறுப்பாளர்களிடமும் 4,560 ஊழியர்களிடமும் நடத்தப்பட்டது.

சிங்கப்பூரின் தொடக்கநிலை ஊழியர்கள் குறித்த ஆய்விற்காக 2026 ஜனவரியில் சிங்கப்பூர் இளையர்கள் 518 பேரிடம் அக்சென்ச்சர் கருத்தாய்வு மேற்கொண்டது.

அவர்களில் 141 பேர், 2026 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிறகு, நாட்டின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இலக்கு குறித்த தங்களது கருத்துகளை மீண்டும் பகிர்ந்துகொண்டனர்.

தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறையில் பொதுவான தொடக்கநிலை வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளபோதும், நிபுணத்துவத் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டுள்ளோர்க்கான தேவை அதிகரித்துள்ளதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஏஐ, இயந்திரக் கற்றல், தரவு மேலாண்மை போன்ற துறைகளில் வளர்ச்சி கூடி வருவதாக அது சுட்டியது.

குறிப்புச் சொற்கள்