தெங்கா பள்ளிக் கட்டுமானத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடும்: அறிக்கை

தெங்கா பள்ளிக் கட்டுமானத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடும்: அறிக்கை

2 mins read
c8555077-b7e6-4834-8b80-c6a24d842718
பின்னணியில் தெரியும் வனப்பகுதியில் யுடபிள்யூசிஎஸ்இஏ பள்ளியின் தெங்கா வளாகம் அமையவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெங்கா வட்டாரத்தில் உருவாகவிருக்கும் புதிய அனைத்துலகப் பள்ளியால் பல்லுயிர்ச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. அங்குத் தென்கிழக்காசிய யுனைட்டெட் வோர்ல்ட் கல்லூரி (யுடபிள்யூசிஎஸ்இஏ) அனைத்துலகப் பள்ளி வரவிருக்கிறது.

அருகிவரும் நிலையில் உள்ள பாடும்பறவை, நீண்ட வால் குரங்கு போன்றவற்றின் வாழ்விடத்தை அது பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பள்ளியின் இணையத்தளத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) வெளியிடப்பட்ட சுற்றுச்சூழலின் தாக்கத்தை மதிப்பிடும் அறிக்கையொன்றில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு வகைப் புல்லினம் அந்தப் பகுதியில் இருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது.

கட்டுமானத்திற்காக நிலத்தைப் பண்படுத்தும் பணிகள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கின்றன.

புதிய பள்ளியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கமும் அதனை எவ்வாறு குறைக்கலாம் என்பதற்குரிய பரிந்துரைகளும் 211 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூரின் முதல் “வன நகரம்” என்று தெங்கா குறிப்பிடப்படுகிறது. அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஐந்தாவது சுற்றுச்சூழல் ஆய்வு அது.

புதிய பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் 9.48 ஹெக்டர் (13 காற்பந்துத் திடல்களுக்குச் சமம்) பரப்பளவில் மேற்கொள்ளப்படும். ஆரக்கான் பொறியியல் ஆலோசனை நிறுவனம் அந்த அறிக்கையைத் தயாரித்தது.

2024ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட ஆய்வு, இவ்வாண்டு பிப்ரவரியில் நிறைவுற்றதாகப் பள்ளியின் இணையத்தளம் குறிப்பிடுகிறது. ஆய்வுப் பணியில் 137 விலங்கினங்கள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றில் ஆறு பாதுகாக்கப்பட வேண்டியவை. பாடும் பறவையான புல் புல், ஹார்லெக்வின் வண்ணத்துப்பூச்சி, சிறுத்தைப் பூனை முதலியவை அவற்றுள் அடங்கும்.

அங்குள்ள இயற்கை நீர்நிலைகளை அழிப்பது வனவிலங்குகளுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்துக் கருத்துகள் எவையேனும் இருந்தால் பொதுமக்கள் மே 8ஆம் தேதிவரை பள்ளியின் இணையத்தளத்தில் அவற்றைச் சமர்ப்பிக்கலாம்.

அரசாங்கத்திடமிருந்து இறுதி ஒப்புதலைப் பெறும் முன்பு, பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்ற பொதுமக்களின் அனைத்துக் கருத்துகளையும் பரிசீலிக்கப்போவதாகப் பள்ளி (யுடபிள்யூசிஎஸ்இஏ) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்