அனைவருக்கும் சமமான சட்டம், தகுதிக்கு முன்னுரிமை: எட்வின் டோங்

அனைவருக்கும் சமமான சட்டம், தகுதிக்கு முன்னுரிமை: எட்வின் டோங்

3 mins read
3f61c34f-3b52-41ac-85c7-ebb8e73e88a0
‘எஸ்ஜிலா200’ இளையர் கருத்தரங்கின் ஓர் அங்கமாக நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற (இடமிருந்து) துணைத் தலைமைச் சட்ட அதிகாரி கோ யிஹான், உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது பைசால் முகம்மது அப்துல் காதிர், சட்ட அமைச்சர் எட்வின் டோங், ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி சாய் செங் யிங். - படம்: பெரித்தா ஹரியான்

தகுதியும் திறமையும் கொண்ட எவரும் சிங்கப்பூரில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு இங்குள்ள தகுதிக்கு முன்னுரிமை நடைமுறை (meritocracy system) அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் புதன்கிழமை (மே 13) கூறியுள்ளார்.

எவ்வித விதிவிலக்குமின்றி அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் சட்டத்தின் ஆட்சி (rule of law) அதனைச் சாத்தியமாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் புங் ஹாவ் சட்டப்பள்ளியில் நடந்த ‘எஸ்ஜிலா200’ (SGLaw200) இளையர் கருத்தரங்கின் ஓர் அங்கமாக நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் சட்டக் கட்டமைப்பின் 200ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில், சட்ட அமைச்சும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் 478 பேர் கலந்துகொண்டனர்.

எதிர்காலத்தில் மலாய்/முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாகவோ சட்ட அமைச்சராகவோ வர சிங்கப்பூரின் அமைப்பு வாய்ப்பளிக்கிறதா என்று மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் டோங் அவ்வாறு பதிலளித்தார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற மற்றொரு பேச்சாளரான உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது பைசால் முகம்மது அப்துல் காதிரைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், அவர் தமது இனம் அல்லது பின்னணியால் அல்லாமல், திறமையாலேயே மதிக்கப்படும் நீதிபதியாக உயர்ந்துள்ளதைச் சுட்டினார்.

அதே கேள்விக்கு பதிலளித்த நீதிபதி பைசால், இலக்குகளை அடைய கண்ணாடித் திரை (glass ceiling) தடையாக இருக்கும் என எண்ணக்கூடாது என்றும் தங்களுக்குப் பின் வரும் தலைமுறையினருக்காக அந்தத் தடைகளை உடைத்தெறிய வேண்டும் என்றும் இளையர்களைக் கேட்டுக்கொண்டார்.

‘புரோ போனோ எஸ்ஜி’ (Pro Bono SG) அமைப்பின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி சாய் செங் யிங் வழிநடத்திய இந்தக் கலந்துரையாடலில், துணைத் தலைமைச் சட்ட அதிகாரி கோ யிஹானும் பங்கேற்றார்.

சட்டத்தின் ஆட்சி என்பது முதலீடுகளை ஈர்ப்பதுடன் நில்லாமல், வாடகைதாரர்களை நியாயமற்ற முறையில் வெளியேற்றுவதைத் தடுப்பது போன்ற அன்றாட வாழ்வியலிலும் சாமானியர்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என திரு டோங் வலியுறுத்தினார்.

முதல்தரமான சட்டக் கட்டமைப்பு இருந்தாலும், சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளோரால் அதனை அணுக முடியவில்லை என்றால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டங்கள் சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறிய திரு டோங், இல்லப் பணிப்பெண்கள், குழந்தைகள் போன்ற மற்றவர்களைச் சார்ந்துள்ள, எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களைத் துன்புறுத்துவோருக்குச் சட்டம் எவ்வாறு கணிசமான கடுமையான தண்டனைகளை விதிக்கிறது என்பதையும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.

சட்டமியற்றும் செயல்பாட்டில் இளையர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று ஊக்கமளித்த திரு டோங் அண்மையில் இயற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டத்தை வரையும்போது, இணையத் தீங்குகளிலிருந்து சட்டம் அவர்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய, பல மாதங்களாக அமைச்சு இளையர்களுடன் விரிவாகக் கலந்தாலோசித்ததாக சொன்னார்.

மாறிவரும் சமூக மதிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப சட்டம் எவ்வாறு மாற வேண்டும் என்பது குறித்த கேள்விகளுக்கும் பேச்சாளர்கள் பதிலளித்தனர்.

ஓரின, இருபாலின, திருநங்கை சமூகத்தினருக்கு தற்போது சிவில் திருமணங்களுக்கான அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்று கேட்கப்பட்டதற்குத் திரு டோங் பதிலளித்தார்.

தற்போதைய சமூகத்தின் பெரும்பான்மை கருத்தொற்றுமை என்பது ஓர் ஆணும் பெண்ணும் இணைந்த குடும்பக் கட்டமைப்பை மையமாகக் கொண்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

377ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதைப் போல, காலப்போக்கில் சமூக மதிப்புகள் மாறக்கூடும் என்றார் அவர். ஆயினும், சமூகத்தில் பெரும்பான்மையினர் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதிசெய்ய, அரசாங்கம் படிப்படியான கட்டங்களில் நகரவே விரும்புகிறது என்று திரு டோங் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு சட்டக் கட்டமைப்புகள் எவ்வாறு கையாளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எவ்வாறு பொறுப்பு உறுதிசெய்யப்படும் என்ற கேள்விக்குத் துணைத் தலைமைச் சட்ட அதிகாரி கோ பதிலளித்தார்.

புதிய சட்டங்களை இயற்றுவது, புதிய சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் வகையில் தற்போதைய விரிவான சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பது, புதிய நிலைகளைக் கையாள நீதிபதிகளின் மூலம் பொதுச் சட்டத்தை உருவாக்குவது ஆகிய மூன்று வழிகளில் சட்டம் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

முடிவுகளைத் தீர்மானிப்பதற்கு முன்வைக்கப்படும் வாதங்கள், முந்தைய தீர்ப்புகள் ஆகியவற்றைத் திறந்த மனதுடன் நீதிமன்றங்கள் அணுகுவதாக நீதிபதி பைசால் குறிப்பிட்டார்.

சட்டத்தின் ஆட்சி ஒருபோதும் நிலையானதாக, மாறாததாக இருக்கக்கூடாது என்று திரு டோங் கூறினார்.

அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களுக்குச் சேவை செய்யவும், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும், நவீன, மாறிவரும் உலகத்துடன் ஈடுகொடுக்கவும் சட்டம் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்