இஆர்பி 2, நடமாட்டச் சாதனக் கட்டுப்பாடு; நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

இஆர்பி 2, நடமாட்டச் சாதனக் கட்டுப்பாடு; நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

2 mins read
0e65608f-67aa-493a-a911-201077d6cc59
2029 ஜூன் 1 முதல், பொதுப் பாதைகளில் இயக்கப்படும் நடமாட்டச் சாதனங்களைப் பதிவு செய்யாதது குற்றமாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாடாளுமன்றம் போக்குவரத்துச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தனிநபர் நடமாட்டச் சாதனம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது, நடந்து செல்வோரைப் பாதுகாப்பது போன்றவை சட்ட மாறுதலில் அடங்கும்.

‘நிலப் போக்குவரத்து மற்றும் தொடர்புடைய விவகாரங்கள்’ என்னும் மசோதாவின்கீழ் அறிமுகம் செய்யப்படும் புதிய சட்டத்தின்படி, சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓபியு (on-board unit) கருவி பொருத்தப்பட வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறைக்கு (இஆர்பி) முழுமையாக மாற முடியும்.

ஒரு வாகனத்தின் இருப்பிடத்தையும் அதற்கான சாலைக் கட்டணத்தையும் இஆர்பி நுழைவாயில்களில் உள்ள தொழில்நுட்பமே தீர்மானித்து வருகிறது.

ஆனால், ஓபியுவுடன் கூடிய இஆர்பி 2 முறை, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைக் கணிக்கும்.

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மற்றொரு சட்ட மாற்றம் தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்புடையது. தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் ஜூன் 1 முதல், மருத்துவத் தேவைக்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் எனப் புதிய சட்டம் வரையறுக்கிறது.

இருப்பினும், 70 வயதை எட்டிய முதியோரை உள்ளடக்கிய சில குழுக்களுக்கு அதிலிருந்து விலக்களிக்கப்படும்.

நடமாட்டப் பிரச்சினை இல்லாதோர் அத்தகைய சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது புதிய சட்டத்தின் நோக்கம்.

வரும் ஜூன் 1 முதல் விற்கப்படும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பதிவுசெய்ய வேண்டியதும் பொதுப் பாதைகளில் அவற்றின் வேகவரம்பை மணிக்கு 10 கிலோமீட்டரிலிருந்து ஆறு கிலோமீட்டருக்குக் குறைப்பதும் சட்டத்திற்குட்பட்ட புதிய விதிமுறைகள்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் உரிமையாளர்கள் தங்களது சாதனத்தை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து பதிவு செய்யத் தொடங்கலாம்.

2029 ஜூன் 1ல் சட்டம் நடப்புக்கு வந்த பின்னர், பொதுப் பாதைகளில் இயக்கப்படும் நடமாட்டச் சாதனங்களைப் பதிவு செய்யாதது குற்றமாகும்.

புதிய மசோதா பற்றி இரு நாள்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் மன்றத்தில் பேசியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்