ஆர்ச்சர்ட் சாலையில் மீண்டும்இஆர்பி கட்டணம் விதிக்கப்படலாம்: ஆணையம்

ஆர்ச்சர்ட் சாலையில் மீண்டும்இஆர்பி கட்டணம் விதிக்கப்படலாம்: ஆணையம்

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 May 2026 - 6:40 pm

2 mins read

ஆர்ச்சர்ட் சாலையில் மீண்டும் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) அமல்படுத்தப் படலாம் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை அன்று (மே 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான, பரபரப்பான சாலைகளில் ஒன்று ஆர்ச்சர்ட் சாலை. அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடைந்தால் இஆர்பி கட்டணம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அது கூறியது.

கடந்த 2020 ஏப்ரல் முதல், அதாவது ஆறு ஆண்டுகளாக ஆர்ச்சர்ட் சாலையில் இஆர்பி கட்டணம் எதுவும் இல்லை.

இந்நிலையில் சாலை நிலவரத்தை ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

2025 அக்டோபரிலிருந்து ஆர்ச்சர்ட் சாலையில் போக்குவரத்து பொதுவாக குறிப்பிட்ட அளவுக்குள் இருந்து வருகிறது. ஆனால் அடுத்த காலாண்டில் சாலை நெரிசல் மோசமடைந்தால் அப்பகுதியில் இஆர்பி கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

இதற்கிடையே பள்ளி விடுமுறை நாள்களான ஜூன் 2 முதல் ஜூன் 28 வரை ஆறு இடங்களில் இஆர்பி கட்டணங்களில் கழிவு வழங்கப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.

நகரை நோக்கிச் செல்லும் அலெக்சாண்டிராவுக்கு முன்புள்ள ஆயர் ராஜா விரைவுச் சாலை, ஜூரோங் டவுன் ஹாலுக்குப் பிறகு ஆயர் ராஜா விரைவுச் சாலை, பிராடல் ரோடுக்கு முன்பு தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலை, டெஃபு மேம்பாலத்துக்குப் பிறகு காலாங்-பாயலேபார் விரைவுச் சாலை, யூனூஸ் லிங்க் முன்பு மேற்கு நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலை, தீவு விரைவுச் சாலைக்குப் பிறகு வடக்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலை ஆகியவை ஆறு இடங்களாகும். இந்தச் சலுகை ஜூன் 29 வரை நீடிக்கும்.

அதே சமயத்தில் இரண்டு இடங்களில் இஆர்பி ஒரு வெள்ளி கூடுகிறது.

ஏப்ரலில் போக்குவரத்து நிலவரத்தைக் கண்காணித்ததில் விரைவுச் சாலையின் பல இடங்களில் நெரிசல் அதிகமாகியிருப்பதாக ஆணையம் கூறியது.

நகரை நோக்கிச் செல்லும் ஜூரோங் டவுன் ஹாலுக்குப் பிறகு ஆயர் ராஜா விரைவுச் சாலை, பெண்டமியர் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலை (காலாங் பாரு, சிலிப் ரோடு) ஆகிய இரண்டு இடங்களில் இஆர்பி கட்டணம் ஒரு வெள்ளி அதிகமாகும்.

ஒரு வெள்ளி கூடுவதால் சில குறிப்பிட்ட நேரங்களில் இஆர்பி கட்டணம் ஐந்து வெள்ளி வரை இருக்கும். அந்த வகையில் ஆயர் ராஜா சாலையில் காலை 7.00 முதல் 8.00 வரையில் கட்டணம் ஐந்து வெள்ளியாக இருக்கும்.

மோட்டார் வாகனவோட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று வழியைப் பரிசீலிக்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டது.

குறிப்புச் சொற்கள்
இஆர்பிசாலைக் கட்டணம்நிலப் போக்குவரத்து ஆணையம்