ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள 11 இடங்களில் செப்டம்பர் 7ஆம் தேதிமுதல் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) மீண்டும் அமல்படுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை அணுக்கமாகக் கண்காணித்து வந்ததாகவும் 2025 அக்டோபர் முதல் அங்கு நெரிசல் தொடர்வதைக் கண்டறிந்ததாகவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டது.
மேலும், முதன்மைச் சாலைகளுக்கான வேக வரம்பான மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் என்பதைவிட அங்கு வாகனப் போக்குவரத்து மெதுவாக இருந்ததாகவும் அது கூறியது.
இதனைச் சீரமைக்க, செப்டம்பர் 7ஆம் தேதியிலிருந்து வார நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை வாகனவோட்டிகளுக்கு $1 மின்னியல் சாலைக் கட்டணம் விதிக்கப்படும்.
2025 அக்டோபரிலிருந்து சனிக்கிழமைகளிலும் ஆர்ச்சர்ட் சாலையில் போக்குவரத்து வேகம் உகந்த அளவைவிடத் தொடர்ந்து குறைவாகவே இருந்ததாக ஆணையம் குறிப்பிட்டது. நிலைமையைக் கண்காணித்து, சனிக்கிழமைகளிலும் இஆர்பி கட்டணத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மதிப்பிடப்படும் என்று அது தெரிவித்தது.
இதேபோல, மத்திய விரைவுச்சாலையின் சில பகுதிகளில் வார நாள்களில் பிற்பகல் வரை நீண்ட நேரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் குறிப்பாக, பிரேடல் சாலைக்கு முந்தைய மத்திய விரைவுச்சாலையின் பாதையில் வாகன வேகம் தொடர்ந்து குறைவாக இருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
நெரிசல் மோசமடைந்தால் இஆர்பி கட்டண நேரத்தை நீட்டிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படலாம் என்று அது கூறியது.


