இஆர்பி2: சாலை நிலவரங்களைக் காட்டும் காணொளிகள் ஜூன் 30 முதல் நிறுத்தப்படும்

இஆர்பி2: சாலை நிலவரங்களைக் காட்டும் காணொளிகள் ஜூன் 30 முதல் நிறுத்தப்படும்

இஆர்பி 2 அறிமுகமாவதால் நிலப்போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 May 2026 - 5:35 am

2 mins read

சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை (இஆர்பி2) விரைவில் அறிமுகமாகவிருக்கிறது.

அதனையொட்டி பெரும்பாலான கேமராக்களிலிருந்து ஒளிபரப்பப்படும் சாலை நிலவரங்கள் பற்றிய நேரடிக் காட்சிகள் ஜூன் 30ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. சில அறிவிப்புப் பலகைகளும் படிப்படியாக அகற்றப்படும்.

இதற்கு மாற்றாக, சாலை நிலவரங்கள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முக்கிய விவரங்களை நிலப்போக்குவரத்து ஆணையத்தின் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை (இஆர்பி2) வழியாக வாகன உள்சாதனங்களில் (ஓபியு) தெரிவிக்கப்படும். இச்சாதனங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் அனைத்து வாகனங்களிலும் பொருத்துவது கட்டாயமாகும்.

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச்சோதனை சாவடிகள், செந்தோசா கேட்வே ஆகியவற்றின் நேரடி ஒளிபரப்பு மட்டும் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒன்மோட்டாரிங் தளத்திலும் நிலப்போக்குவரத்து ஆணையத்தின் இணையத் தளத்திலும் சாலை நிலவரங்கள் நேரடியாகக் காட்டப்படுகின்றன.

வாகனமோட்டிகள் தங்கள் பயணங்களை திட்டமிடுவதற்கு ஏதுவாக சில மூன்றாம் தரப்பு இணையத்தளங்களும் செயலிகளும் இவற்றைப் பயன்படுத்துகின்றன. இருந்தாலும் இந்தக் காணொளிக் காட்சிகளின் பயன்பாடு குறைவாகவே உள்ளது என்று ஆணையம் குறிப்பிட்டது. கடந்த மே 1ஆம் தேதி ஒன்மோட்டாரிங் இணையத்தளத்தில் நேரலைக் காட்சிகள் நிறுத்தப்போவதைப் பற்றி முன்னதாக ஆணையம் அறிவித்திருந்தது.

“இஆர்பி-2க்கு மாறுவதால் இனி முக்கியப் போக்குவரத்து நிலவரங்களை வாகனத்தில் உள்ள ஓபியு வழியாக ஆணையம் தெரிவிக்கும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். “பொதுமக்கள் புதிய மாற்றத்திற்கு ஏற்ப சரி செய்துகொள்வதற்காக சாலை நிலவரக் காட்சிகள் நிறுத்தப்படுவதை முன்னதாகவே அறிவித்திருக்கிறோம். வாகனமோட்டிகள் தொடர்ந்து ஓபியு சாதனம், ஒன்மோட்டாரிங், மைடிரான்ஸ்போர்ட் செயலி, வானொலி நிலையம், பொதுவில் கிடைக்கும் வழிகாட்டி செயலிகள் வழியாக சாலை நிலவரம், போக்குவரத்து நெரிசல், முக்கியச் சாலைச்சம்பவங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்,” என்று அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
இஆர்பிமின்னியல்சாலைபோக்குவரத்துநிலப் போக்குவரத்து ஆணையம்