ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான டுரியான் அறுவடைக் காலத்தில், அடுத்த சில வாரங்களில் நிலவப்போகும் வானிலை மாற்றங்கள் பழங்களின் அளவையும் தரத்தையும் பாதிக்கலாம் என்று விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் சில பகுதிகளிலிருந்து இந்த மாத இறுதியில் டுரியான் பழங்கள் சிங்கப்பூருக்கு வரவிருக்கும் வேளையில், அவற்றின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகப்படியான மழைப்பொழிவு டுரியான் பழங்களின் சுவையையும் பழுக்கும் தன்மையையும் பாதிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். அறுவடை செய்யப்படும் டுரியான்களின் எண்ணிக்கை அதன் விலையைத் தீர்மானித்தாலும், பழத்தின் தரமே விலையில் முக்கியப் பங்கு வகிப்பதாக ராயல் டுரியான் நிறுவனத்தின் நிறுவனர் திரு ஜெரமி சியூ குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்தால் விலை மிக மலிவாகிவிடும் என்றும் நாள்தோறும் கனமழை பெய்தால் பழங்கள் சுவையின்றியோ அல்லது பழுக்காமலோ போகக்கூடும் என்றும் விற்பனையாளர்கள் சுட்டினர்.
இத்தகைய நிலையற்ற வானிலைக்கு மத்தியில், வாடிக்கையாளர்களைச் சென்றடைய வியாபாரிகள் தற்போது நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, ‘லைவ்ஸ்ட்ரீமிங்’ எனப்படும் நேரடி ஒளிபரப்பு வழியிலான விற்பனை முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பழங்கள் நேரடியாக உடைக்கப்படுவதைப் பார்த்துவிட்டு, உடனுக்குடன் ‘ஆர்டர்’ செய்ய முடிகிறது.
நேரடி ஒளிபரப்பு மூலம் ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடிவதாக தோ பாயோவில் உள்ள ரோலிங் டுரியான் கடையின் இணை நிறுவனர் திரு ஆஸ்டின் குவேக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதன் மூலம் தங்களது இணையவழி விற்பனை 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். அதேவேளையில், இணையவழியில் போட்டி அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்களைக் கவர விற்பனையாளர்கள் தள்ளுபடிகள் மற்றும் சலுகைத் தொகுப்புகளையும் வழங்கி வருகின்றனர்.

