15,000 பேருக்குத் தவறான தேசிய சேவையாளர் வரி நிவாரணம்

தற்காப்பு அமைச்சின் கணினி அமைப்பில் பிழை

15,000 பேருக்குத் தவறான தேசிய சேவையாளர் வரி நிவாரணம்

2 mins read
c8a66d35-3a2b-4cf4-9135-0293fa329984
2026 பிப்ரவரி 26ஆம் தேதி, தற்காப்பு அமைச்சு தலைமையகத்தில் எடுக்கப்பட்ட படம். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தற்காப்பு அமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஏறக்குறைய 15,000 வரிசெலுத்துவோரின் தேசிய சேவைக்கான வரி நிவாரணத் தொகைகளில் பிழை ஏற்பட்டுள்ளது.

தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன.

இந்த விவகாரத்தால் தயார்நிலை தேசிய சேவையாளர்கள், அவர்களின் தகுதிபெற்ற பெற்றோரும் மனைவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 15,000 வரிசெலுத்துவோரில் ஏறக்குறைய 7,000 பேருக்கு வரித்தொகை அதிகரிக்கும். எஞ்சிய 8,000 பேருக்கு வரித்தொகை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோருக்கு இந்த வரித்தொகை மாற்றம் $200க்கும் குறைவாகவே இருக்கும். தனிநபரின் வரி நிவாரணத் தகுதியையும் வருமான வரி வரம்பையும் பொறுத்து, இந்த மாற்றம் $10க்குக் குறைவாகவோ அல்லது $900 வரையிலோ இருக்கலாம்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக $930,000 மீண்டும் பெறப்படும். அதேவேளையில் $995,000 திரும்பத் தரப்படும்.

இந்தத் தவறான வரி நிவாரணக் கணக்கீடுகள் 2025, 2026ஆம் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கானவை. இருப்பினும், இந்தப் பிழை முழுநேரத் தேசிய சேவையாளர்களைப் பாதிக்காது.

தற்காப்பு அமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட பிழையால், தவறான தேசிய சேவை நடவடிக்கைப் பதிவுகள் உருவானதே இதற்குக் காரணம். 2026 மே மாதம் சேவையாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்தபோது இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது தற்காப்பு அமைச்சு இந்தப் பிழையைச் சரிசெய்து, பாதிக்கப்பட்ட அனைத்து தேசிய சேவையாளர்களுக்கும் நேரடியாகத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தகைய தவறு மீண்டும் நிகழாமல் இருக்கக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

உள்நாட்டு வருவாய் ஆணையம் திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டு அறிக்கைகளைச் செப்டம்பருக்குள் வழங்கும். அதில் செலுத்த வேண்டிய கூடுதல் வரித்தொகை அல்லது திரும்பப் பெறப்படும் தொகையின் விவரங்கள் குறிப்பிடப்படும்.

பாதிக்கப்பட்ட வரிசெலுத்துவோர், திருத்தப்பட்ட அறிக்கையைப் பெறும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.

மாதாந்தர தவணைத் திட்டத்தைப் பயன்படுத்துபவர்களுக்குக் கட்டணத் தொகை தானாகவே சரிசெய்யப்படும். மற்றவர்கள், திருத்தப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் வரி செலுத்தவேண்டும். திரும்பத் தரப்பட வேண்டிய தொகையும் தானாகவே வரவு வைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்