சிங்கப்பூரின் எஸ்பிளனேட் கலைகள் நிலையத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் நுழைவுச்சீட்டுகளின் விற்பனையும் வருமானமும் அதிகரித்ததுடன் செலவுகள் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதிவரையிலான நிதியாண்டுக்கு உரிய வருடாந்தர நிதி அறிக்கையை எஸ்பிளனேட் கலைகள் நிலையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்டது.
அதன்படி, நேரடி வருகையாளர்களின் எண்ணிக்கை 1.9 மில்லியனைத் தொட்டது. அது, கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்துக்கும் முன்னர் பதிவான எண்ணிக்கைக்கு நிகரானது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் நேரடி வருகையாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 மில்லியனைத் தொட்டது.
எஸ்பிளனேட் அரங்கம், கலை நிகழ்ச்சிக் கூடத்தின் புதுப்பிப்புப் பணிகளுக்காக ஒருசில மாதங்கள் மூடப்பட்டிருந்தபோதும் வருகையாளர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.
மேலும், இணையம்வழி நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டோர் எண்ணிக்கை 2024ஆம் நிதியாண்டுடன் ஒப்புநோக்க இரட்டிப்பானது. 2024ல் இணையம்வழி நிகழ்ச்சிகளைக் கண்டோர் எண்ணிக்கை 1.9 மில்லியனாக இருந்தது. அந்த எண்ணிக்கை 2025ஆம் நிதியாண்டில் 4.09 மில்லியனாக அதிகரித்தது.
கலைகள் நிலையத்தின் நிதி நிலவரமும் மேம்பட்டிருந்ததை அறிக்கை சுட்டியது.
எஸ்பிளனேட்டின் மொத்த வருவாய் $33.8 மில்லியனாகப் பதிவானது. கடைத்தொகுதிகள், பிற வாடகை மூலம் வசூலிக்கப்பட்ட வருவாய் $8.7 மில்லியன். அந்தத் தொகை 2024ஆம் நிதியாண்டில் $7.62ஆக இருந்தது.
நுழைவுச்சீட்டுகளின் விற்பனையும் $5.94 மில்லியனுக்கு அதிகரித்தது.
எஸ்பிளனேட் & மி உறுப்பினர் திட்டத்தில் புதிதாக 400,000 பேர் சேர்ந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 166,000 பேர் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
