மூன்றாவது நாளாகப் பெட்ரோல் விலையை உயர்த்திய எஸ்ஸோ

மூன்றாவது நாளாகப் பெட்ரோல் விலையை உயர்த்திய எஸ்ஸோ

2 mins read
0718de1e-74ca-439f-b79d-7f73bd511ba8
எஸ்ஸோ நிலையங்களின் 92, 95, 98 ரக பெட்ரோல், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 4 காசு அதிகரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் விலைகளைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளன. பெட்ரோல் விலையை உயர்த்திய ஆக அண்மைய நிறுவனம் எஸ்ஸோ.

எஸ்ஸோ நிலையங்களின் 92, 95, 98 ரக பெட்ரோல், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 4 காசு அதிகரித்தது.

எஸ்ஸோ நிறுவனம் அதன் பெட்ரோல் விலையைக் கடந்த இரண்டு நாள்களில் ஒரு லிட்டருக்கு 12 காசு என்று அதிகரித்துள்ளது.

ஷெல் நிறுவனம், ஒரு நாளுக்குமுன் அதன் பெட்ரோல் விலையை 4 காசு உயர்த்தியது.

பெரும்பாலான வாகனவோட்டிகள் பயன்படுத்தும் 95 ரக பெட்ரோலின் விலை எஸ்பிசி நிறுவனத்தில் தற்போது $3.36. கால்டெக்ஸ், எஸ்ஸோ, ‌ஷெல் ஆகியவற்றில் பெட்ரோல் விலைகள் $3.49ஆக உள்ளன.

அமெரிக்காவில் கச்சா எண்ணெய்யின் இருப்பு எதிர்பாராதவிதமாக அதிகரித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை காலை 8.28 மணியளவில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் எதிர்கால ஒப்பந்தங்கள் $107.82 அமெரிக்க டாலருக்குச் சரிந்தது.

இதற்கிடையில், கடந்த வாரம் செங்கடலை இணைக்கும் கிழக்கு-மேற்கு குழாய் பாதையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது யான்பு துறைமுகத்தில் எண்ணெய் ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியதால் முதலீட்டாளர்கள் விநியோக அபாயங்கள் குறித்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.

போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை பெருமளவில் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாக அரேபிய தீபகற்பம் வழியாக செல்லும் 1,200 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய் பாதை, மத்திய கிழக்கு எண்ணெய்யை உலகளாவிய விநியோகத்திற்கு கொண்டு செல்வதற்கான முக்கிய வழியாக செயல்பட்டு வந்தது.

அது நாளொன்றுக்கு நான்கிலிருந்து ஐந்து மில்லியன் பீப்பாய்வரை எண்ணெய் விநியோகம் செய்து வந்தது.

உலகளாவிய விநியோகத்தில் அது 4லிருந்து 5 விழுக்காட்டுக்குச் சமம்.

குறிப்புச் சொற்கள்
பெட்ரோல்விலைஉயர்வு