தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஜக வென்றாலும் வட்டார மேம்பாடுகள் தொடரும்: பால் தம்பையா

3 mins read
f638d5d3-4f3a-422f-8d04-c20a0ec0913b
புக்கிட் பாஞ்சாங் மக்களுக்குத் தேசிய, வட்டாரத் திட்டங்கள் பற்றி பகிர தாம் நடத்தவுள்ள மக்கள் தொடர்புக் கூட்டங்கள் உதவும் என்றார் டாக்டர் பால் தம்பையா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) தேர்தலில் வெற்றிபெற்றாலும் நடப்பிலுள்ள வட்டார மேம்பாடுகள் தொடரும் என்றார் டாக்டர் பால் தம்பையா.

அக்கட்சி ஆறு நாள்களில் நடத்திய ஏழாவது பிரசாரக் கூட்டத்தில் (ஏப்ரல் 29) அவர் அவ்வாறு கூறினார்.

“கூரைவேய்ந்த பாதைகள், விளையாட்டுத் திடல், புதிய இணைப்புப் பாதை - இவை அனைத்தின் கட்டுமானப் பணிகளும் தொடரும். ஏனெனில், அவற்றுக்கான நிதி நம் வரிப் பணத்திலிருந்து வருவது, மசெகவிடமிருந்து அல்ல,” என்றார் டாக்டர் தம்பையா.

“இத்திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள் அரசாங்க அமைப்புகளிலிருந்து வரும் திறன்மிக்க நிபுணர்கள். அவை மக்களுக்குச் செவிசாய்ப்பவை. அரசியல்வாதிகளின் வற்புறுத்தலுக்கு இணங்குபவர்களல்ல,” என்றார் அவர்.

மக்களிடமிருந்தும் நல்ல யோசனைகள் வரலாம் என்பதால் அவர்களுடைய கருத்துகளைத் தெரிந்துகொள்ள சிஜக மக்கள் தொடர்புக் கூட்டங்களை (டவுன் ஹால்) நடத்தும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் ஓங் யி காங் தம் கட்சியின் கொள்கைகளைச் சாடியதுக்கும் பதிலடிக் கொடுத்தார் பேராசியர் பால் தம்பையா. “சிஜக முன்மொழிந்த எந்தக் கொள்கைகளை பின்னர் மசெக அறிமுகப்படுத்தியது என நான் சேட்ஜிபிடியிடம் கேட்டேன். அவற்றில் பல கொள்கைகளும் 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டன என அது கூறியது,” என்றார் அவர்.

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையின் (எல்ஆர்டி) நெடுங்கால நிலைத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பினார் டாக்டர் தம்பையா.

“எல்ஆர்டிக்கெனப் பெரிய புதுப்பிப்புப் பணிகளை எஸ்எம்ஆர்டி, போக்குவரத்து அமைச்சு போன்ற அமைப்புகள் இணைந்து செயல்படுத்தின. 2024ல் முடிந்திருக்கவேண்டிய பணிகள் 2026ல் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செலவுகள், பயன்கள்பற்றி ஆழமான ஆய்வு அவசியம்,” என்றார் டாக்டர் தம்பையா.

‘நான் முழுநேர நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன்’: சீ சூன் ஜுவான்

தான் தேர்தலில் வெற்றிபெற்றால் முழுநேர நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பாரென வாக்குறுதி கொடுத்தார் டாக்டர் சீ சூன் ஜுவான்.

“நான் நடத்தும் ஆரஞ்சு அண்ட் டீல் நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளை வேறு யாரிடமோ ஒப்படைப்பேன். நாடாளுமன்றத்தில் இல்லாத நாள்கள் அனைத்திலும் நான் செம்பவாங் வெஸ்ட் வட்டாரத்தில் இருப்பேன்,” என்றார் அவர்.

மசெக வேட்பாளர் போ லீ சான் தான் மக்கள் தொடர்புக் கூட்டங்கள் பற்றிக் கூறியதைத் தவறுதலாகப் பரப்புவதாகக் கூறினார் டாக்டர் சீ. “நான் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நிறுத்துவேன் என்று சொல்லவில்லை. அதையும் வாராவாரம் தொடந்து நடத்துவேன். இரவில் வரமுடியாதவர்களை நான் பகலிலும் சந்திப்பேன்,” என்றார் அவர்.

“நான் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் 7%க்குக் குறைப்பேன். எவ்வாறு தண்ணீர், பொதுப் போக்குவரத்து, மின்சக்தி, வாயு போன்ற அடிப்படை வி‌‌ஷயங்களின் விலையைக் குறைக்கலாம் என பார்ப்பேன்.

“இதற்கான பணம் எங்கிருந்து வரும்? ஒன்று, ஆடம்பரப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை ஏற்றுவது. இரண்டு, பணக்காரர்களுக்கான வரியை (wealth tax) அறிமுகப்படுத்துவதும் அதிகம் சம்பாதிப்பவர்களின் வருமான வரியை 28-30%க்கு உயர்த்துவதும். மூன்று, வீணாகச் செலவிடுவதை நிறுத்துவது. ஜிஎஸ்டியை ஏற்றியபின் அரசாங்கம் 6 பில்லியனுக்கும் மேற்பட்ட உபரி வந்ததாகக் கூறியது. ஆனால் மக்களோ விலைவாசி உயர்வால் திண்டாடினர்,” என்றார் டாக்டர் சீ.

தான் ஏற்பாடுசெய்யவுள்ள நகர மண்டபங்கள் பற்றியும் விவரங்கள் அவர் பகிர்ந்தார்.

“நான் குடியிருப்பை நான்கு பிரிவுகளாகப் பிரிப்பேன். இரு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு பிரிவில் நகர மண்டபச் சந்திப்புகளை ஏற்பாடுசெய்வேன். தற்போதைய, எதிர்வரும் நகர மன்ற திட்டங்கள் பற்றிக் கூறுவேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்