சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளிலும் அதன் உபகரணங்களிலும் எட்டோமிடேட்டை பயன்படுத்துவது அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இறுகி வருகின்றன.
அடுத்த மாதத்திலிருந்து (செப்டம்பர் 1) ‘எட்டோமிடேட்’ தீங்கு விளைவிக்கும் போதைப்பொருளாக வகைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் ‘எட்டோமிடேட்’ போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ‘சி’ பிரிவு பொருளாக வகைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சிராங்கூனில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் அது பற்றிய விவரங்களை வெளியிட்டார்.
எட்டோமிடேட் பரவலாகப் பயன்படுத்துவதற்கு எதிராக பல அமைச்சர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். தேசிய நாள் பேரணியில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அமலாக்கக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்,குறிப்பாக மின்சிகரெட்டுகள், எட்டோமிடேட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தற்போது நச்சுப்பொருள் சட்டத்தின்கீழ் எட்டோமிடேட் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அது, போதைப்பொருள் சட்டத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்டதும் அதனைப் பயன்படுத்துவோர் கடுமையான தண்டனைகளை எதிர்நோக்குவர். எட்டோமிடேட்டை சட்டவிரோதமாக வைத்திருந்தாலோ மற்றும் அதனைப் பயன்படுத்தினாோலோ அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறையும் 20,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
‘சி’ பிரிவு பொருளைக் கடத்துபவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இதற்கு முன்பு நச்சுப்பொருள் சட்டத்தின்கீழ் நச்சுப் பொருளை வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை, 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தப் பிரிவில் பிப்ரடிரால் (Pipradrol), ‘ஹிப்னாடிக்’ மருந்து எரிமின்5 போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை, முறையான மருத்துவத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் முறையற்ற வகையில், அதிகப்படியாகப் பயன்படுத்தினால் தீங்குகளை ஏற்படுத்தும்.
சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் மின்சிகரெட்டுகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இதர நடவடிக்கைகள் பகிர்ந்துகொள்ளப்படும் என்றார்.
மருத்துவத் துறையில் மயக்கம் ஏற்படுத்துவதற்காக மருத்துவர்களின் மேற்பார்வையில் நரம்பு வழியாக எட்டோமிடேட் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. அது, ஒருபோதும் நேரடியாக சுவாசிப்பதற்கன்று.
ஆனால், எட்டோமிடேட் கலவை மின்சிகரெட்டுகளில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சிறுநீர்ப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது என்று கூறி, இணையம் வழியாக அவற்றைச் சிலர் விற்று வருகின்றனர்.
அண்மை அமலாக்க நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்டு சோதிக்கப்பட்ட மூன்றில் ஒரு மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக கடந்த ஜூலை 20ஆம் தேதி திரு ஓங் தெரிவித்திருந்தார்.
இதனை மின்சிகரெட்டுகளில் பயன்படுத்தும்போது தசைப்பிடிப்பு, சுவாசப் பிரச்சினை, வலிப்பு, மனநோய் போன்றவை ஏற்படுகிறது.