தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ‘எட்டோமிடேட்’: நாடாளுமன்றத்தில் விளக்கம்

2 mins read
6e6ec898-3ac2-426b-aa4e-61d84186153b
சிங்கப்பூரில் மின்சிகரெட் நிலவரத்தின் அவசரம் கருதி, போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ‘எட்டோமிடேட்’ தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படக்கூடிய ‘எட்டோமிடேட்’டை, போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் தற்காலிகமாக வகைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவசரச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்பட்டதாகவும் இருப்பினும், இந்த நடவடிக்கை நிரந்தரம் என்று சொல்ல முடியாது என உள்துறை மூத்த துணை அமைச்சர் ஃபைஷால் இப்ராகிம் கூறியுள்ளார்.

கடுமையான தண்டனை விதிக்கப்படுமளவுக்கு போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் எட்டோமிடேட் கொண்டுவரப்பட்டு உள்ளதால், அந்த வேதிப்பொருள் ஏற்படுத்தக்கூடிய தீமைகள் குறித்து அதிகமான ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டி உள்ளது என்றார் அவர்.

எட்டோமிடேட் போன்ற ஆபத்தான பொருள்களை உள்ளடக்கிய மின்சிகரெட்டுகளின் புழக்கத்தைச் சமாளிக்க, நடப்பில் உள்ள சட்டத்தை வலுவாக்கும் ஒரு முயற்சி அது என்று பேராசிரியர் ஃபைஷால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) கூறினார்.

‘கேபோட்ஸ்’ என்று அழைக்கப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளின் புழக்கத்தை எதிர்த்து சிங்கப்பூர் போராடி வருகிறது.

நிலைமை மோசமாவதைக் கவனித்த அரசாங்கம், எட்டோமிடேட்டைப் பயன்படுத்துவோர் மற்றும் அவற்றைக் கடத்துவோருக்குக் கடுமையான தண்டனைகளை ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவித்தது.

இதற்கு முன்னர் நச்சுப்பொருள் சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டு இருந்த எட்டோமிடேட், போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ், செப்டம்பர் 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை, ஆறு மாதம் மட்டும் கொண்டு வரப்பட்டது ஏன் என செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்குப் பதிலளித்த டாக்டர் ஃபைஷால், போதைப்பொருள் சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனைகள் விதிக்கமுடியும் என்பதால் அவ்வாறு செய்ய உள்துறை அமைச்சு முடிவு செய்ததாகக் கூறினார்.

ஐநா போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக எட்டோமிடேட் கொண்டுவரப்படவில்லை என்று விளக்கிய அவர், சிங்கப்பூரில் மின்சிகரெட் நிலவரத்தின் அவசரம் கருதி, தற்காலிகமாக அது போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்திற்கு உட்பட்டதென அறிவிக்கப்பட்டது என்றார்.

குறிப்புச் சொற்கள்