மழையால் தேங்கிய நீர் காரணமாக வருமானம் 80 விழுக்காடு வரை சரிந்துவிட்டதாக யூனோஸ் கிரசென்ட் உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடைகளின் உள்ளேயும் வெளிப்பகுதிகளிலும் சனிக்கிழமை (செப்டம்பர் 6) காலை 6 மணியளவில் நீர் தேங்கி இருந்ததாகவும் அந்த நீர்மட்டம் அதிகரித்தவாறே இருந்ததாகவும் சாவ்பாவ் செய்தி கூறியது.
உணவங்காடி நிலையத்தில் இருந்து நீரை வெளியேற்றும் குழாய் ஒன்றில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழையால் தேங்கிய நீர் வெளியேறவில்லை என்று சந்தேகிக்கப்பட்டது.
சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்ததால் 15 கடைக்கார்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர், வியாபாரம் சரிவர நடைபெறாததால் வருமானம் குறைந்துவிட்டதாகக் கூறினர்.
பின்னர் ஒருவழியாக, நான்கு மணி நேரம் கழித்து காலை 10 மணியளவில் நீர் வடியத் தொடங்கியதாகவும் நகர மன்ற ஊழியர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டதாகவும் அந்த சீன நாளிதழ் கூறியது.
“வாரயிறுதி என்பதால் சனிக்கிழமை காலைநேரம் வியாபாரம் அதிகமாக இருக்கும். எனது கடை முன்னால் நீண்ட வரிசை இருக்கும். ஆனால், வெள்ளநீர் காரணமாக, குறைந்த வாடிக்கையாளர்களே வந்தனர். அதனால், 80 விழுக்காடு விற்பனை குறைந்துவிட்டது,” என்று கடைக்காரப் பெண்மணி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
தேங்கிய நீர் வடிந்த பின்னரே தம்மால் சமைக்க முடிந்ததாகவும் அதன் பின் கடையைத் திறக்க நண்பகல் 12 மணி ஆகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டும் இதேபோன்ற நிலை ஏற்பட்டதாக சாவ்பாவ் செய்தித்தாளிடம் அந்தப் பெண் தெரிவித்தார்.

